உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           தோன்றக் கூறிய மூன்றி னுள்ளும்
          முன்னைய விரண்டு முடியா மற்றவன்
    35    அரும்பெறன் மடமக ளமிழ்துபடு தீஞ்சொல்
          ஏசுவ தில்லா வெழில்படு காரிகை
          வாசவ தத்தைக்கு வலத்த னாகிச்
          செந்தீ வெம்புகை யிம்பர்த் தோன்றலும்
          அந்தீங் கிளவியை யாண்மையிற் பற்றிக்
    40    காற்பிடி தன்னொ டேற்றுக வேற்றலும்
 
                 (இதுவுமது)
         33 - 40 : தோன்ற..........ஏற்றுக
 
(பொழிப்புரை) ஈண்டு விளக்கமாக யாங்கூறிய கடுந்தொழில் மூன்றனுள் வேந்தனைச் சிறைக்கோடலும் அவன் வியனாடு கெடுத்தலும் என்னும் முற்படக் கூறிய இரண்டு செயலும் இச்செவ்வியில் செய்யக்கூடியன ஆகமாட்டா; எனவே இப்பொழுதுசெய்யற் பாலது அம்மன்னவனுடைய அரும்பெறல் மடமகளும் அமிழ்தம் போன்ற இனிய சொல்லையுடைய வளும் குற்றஞ் சிறிது மில்லாத அழகுபடைத்த காரிகையும் ஆகிய வாசவதத்தையைச் சிறை வௌவுதலேயாம்; ஆகவே எம்பெருமான் முற் படவே அவ்வாசவதத்தைக்கு மிகவும் அணுக்கனாகியிருந்து ஊரிலிட்ட சிவந்த தீயினது வெவ்விய புகைமண்டிலம் ஈண்டுத் தோன்றலுற்ற பொழுதே அழகிய இன்சொல்லையுடைய அவ்வாசவதத்தை நல்லாளைப் பெரு மானுடைய ஆண்மையாலே வயப்படுத்திக் கைப்பற்றிக் காற்றெனக் கடுகிச்செல்லும் இயல்புடைய பத்திராபதியின் மேல் பெருமானொடு ஏற்றிக்கொண்டருள்க! என்க.
 
(விளக்கம்) முன்னைய இரண்டும் முடியா என்றது அவற்றைச் செய்தல் நமக்கும் இன்றியமையாதது அன்று என்றவாறு. ஏசுவது - பழிப்பதற்குரிய குற்றம். வலத்தன் என்றது - அவள் மருங்கினன் என்பதுபட நின்றது. செந்தீ வெம்புகை என்புழிச் செய்யுளின்பம் நுகர்க. இம்பர் - ஈண்டு. ஆண்மையால் வசப்படுத்தி என்றவாறு. உதயணன் ஆண்மைக்கு வயப்படாத மகளிர் இலரல்லரோ? என்பது கருத்து. காற்பிடி: உவமைத்தொக். கால் - காற்று. இதனானும் ஓரேதுக் கூறியவாறாம்.