உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
43. ஊர் தீயிட்டது |
|
40 காற்பிடி
தன்னொ டேற்றுக
வேற்றலும் வேற்படை
யிளையர் நாற்பெருந்
திசையும் வாழ்க
வுதயணன் வலிக்கநங்
கேளெனப் பாழினு
முழையினுங் காழில்
பொத்தினும்
ஒளித்த வெம்படை வெளிப்பட வேந்தி 45
மலைக்குந ருளரெனின் விலக்குந
ராகித் தொலைக்கு
நம்படை துணிந்திது கருதுக
|
|
(இதுவுமது) 40 - 46:
ஏற்றலும்.............கருதுக
|
|
(பொழிப்புரை) அங்ஙனம் எம்பெருமான் வாசவதத்தையைப் பிடி மேலேற்றிய பொழுதே நம்முடைய
வேலேந்திய படை மறவர் மறைந் திருப்பவர் ஞெரேலென நான்கு
பெருந்திசைகளினும் தோன்றி 'வாழ்க எங்கோமகன் உதயண
மன்னன்" என்றும் 'நம்முடைய கேளிர்கள் வெல்க!' என்றும்
ஆரவாரிப்பவராய் மக்கள் வழக்கற்ற பாழிடத்தும் குகை களினும் வயிரமற்ற
மரப் பொந்துகளிலும் தாம் மறைத்து வைத்திருந்த தமது வெவ்விய
படைக்கலன்களை யாவரு மறியக் கையிலேந்தியவராய்த் தம்மோடு போர்
செய்யவரும் பகை மறவர் உளராயின் அவரை விலக்கி அவர்களைக் கொன்று
குவிப்பர். இச்சூழ்வினையனைத்தும் அடியேன் செய்திருத்தலானே எம்பெருமான்
என் கூற்றினை நன்கு தெளிந்து இவ்வாறு செய்தலைத் திருவுளம் பற்றியருள்க
என்க.
|
|
(விளக்கம்) பெருந்திசை -
கிழக்குத் தெற்கு மேற்கு வடக்கு என்பன. வலிக்க - வெல்க. பாழ் - மக்கள்
வழக்கற்ற வறுநிலம். முழை - குகை. காழில் - வயிரமில்லாத. பொத்து -
மரப்பொந்து. மலைக்குநர் - போர் தொடுப்போர். மலைக்குநர் இரார்
என்பான் உளரெனின் என்றான். இவையெல்லாம் யான் சூழ்ந்து
முற்படவே அமைத்துள்ளேன் என்பான் துணிந்து கருதுக
என்றான்.
|