உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           இமைத்தோர் காணா வியற்கைத் தாக
          அமைக்கப் பட்ட வணிநடை மடப்பிடி
          நண்ணா மன்ன னாடுதலை மணந்த
    50    ஐந்நூற் றோடுத லாற்றா தாயினும்
          முந்நூற் றெழுபது முப்பது மோடி
          வீழினும் வீழ்க வேதனை யில்லைக்
          கூழினு முடையினுங் குறிப்பின ராகி
          நாட்டுப்புற மாக்களும் வேட்டுவத் தலைவரும்
    55    குறும்பருங் குழீஇய குன்றுடைப் பெருநா
          டறிந்தோர்க் காயினு மணுகுதற் கரிய
          அரிய வாயினு முரியவை போல
          இயற்றினன் பண்டே கவற்சி நீங்கி
 
            (இதுவுமது)

                47 - 58: இமைத்தோர்............பண்டே

 
(பொழிப்புரை) பெருமானே! தன்னைக் கண்டு கண்ணை இமைத்தவர் மீண்டும் திறந்து காணுங்காற் காணப்படாத இயற்கையான வேகத்தை யுடையதாக ஊழாலே அமைக்கப்பட்டுள்ள அழகிய நடையையுடைய பத்திராபதி என்னுமிவ் விளம் பிடியானை நம்பகை மன்னனாகிய பிரச் சோதனனுடைய ஆட்சியிலடங்கிய நாட்டகத்தே அடங்கிய ஐந்நூறுகாவதத் தொலைவினையும் இற்றைநாளிரவிலேயே ஓடிக் கடக்கமாட்டாதாயினும், நானூறு காவதத்தைக் கடந்துவிடும் என்பது ஒருதலை; அந்த நானூறு காவதங்கடந்து இந்நண்ணாமன்னன் நாட்டகத்திலேயே நலிந்து இப்பிடி யானை வீழினும் வீழ்க; அதனால் ஏதம் ஏதும் நிகழாது; எற்றாலெனின் உண்ணும் கூழிற்கும் உடுத்தும் உடைக்குமே நல்கூர்ந்து அவற்றைப் பெறுதலே குறிக்கோளாகக் கொண்ட நாட்டுப்புற மாக்களும் வேடரும் அவர்தந் தலைவரும் குறும்பரும் ஆகிய இத்தகையோர் குழூஉக்கொண்டு வாழாநின்ற குன்றுகளை உடைய அந்தப் பெரிய நாடுகள் பண்டு பயின்றறிந் தோர்க்கும் அணுகுதற்கரியனவேயாயினும் யான் முன்னரே ஆண்டு வாழ் வோர்க்கெல்லாம் வேண்டும் உண்டியும் உடையும் பிறவும் வழங்கி நமக்கே அவர்களை நம் வழிப்படுத்துமாற்றாலே அவற்றை உரியனபோலச் செய் திருக்கின்றேன் என்க.
 
(விளக்கம்) ஐந்நூறு காவதத்துள் நானூறு காவதம் கடந்த பின்னர் எஞ்சிய தூறுகாவதத்தே உள்ள நாடுகளை நான் முன்னரே ஆண்டு வாழ்வோர்க்கு வேண்டிய உண்டி முதலியன கொடுத்து வயப்படுத்தி விட்டேன் ஆதலால் அவரெல்லாம் நமக்கு நலஞ்செய்வரேயன்றித் தீங்கிழையார் என்றுணர்த்தியபடியாம். கூழ் - உண்டி. உடை - ஆடை. குறிப்பு - குறிக்கோள். கூழும் உடையுமே குறிக்கோளாதலின் அவரை வயஞ்செய்தல் எனக்கு எளி தாயிற்று என்பது குறிப்பு. வேட்டுவரும் அவர் தலைவரும் என்க. குறும்பர் - வேடரில் ஒருவகையினர்; வேடருள் அரசருமாம், ஒருவகை ஆறலைப்பாருமாம்.