உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
         
    95    தாக்குந ரசாஅய்ப்பொர நேர்க்குந ரிரிவுழி
          இருவரு மவ்வழிப் பருவர றீரப்
          பெருவலிக் கிளையிற் கூடுவது போல
          விண்ணக மருங்கிற் கண்ணகன் றுராஅய்
          மண்ணக மறிக்கு மதுகைத் தாகிப்
   100     பாருடைப் பவ்வம் பருகுபு நிமிர்ந்த
          நீருடைக் கொண்மூ நெகிழாக் காலொ
          டெண்டிசைப் பக்கமு மெதிரெதிர் கலாஅய்க்
          கண்டவர் நடுங்கக் கடுவளி தோன்றலிற்
 
                    (இதுவுமது)

                95 - 103: தாக்குநர்..........தோன்றலின்

 
(பொழிப்புரை) இரண்டு பகைமன்னர்கள் ஒருவரோடொருவர் போர் செய்யுங்கால் அவருள் வலிந்து போர் செய்யும் படைஞர் போரின்கண் இளைப்புற்றுழியும் மானப்பண்பாலே விடாமற் போர் ஆற்றாநிற்பவும், அவரை எதிர்க்கும் படைஞர் ஆற்றாமற் புறங்கொடுத்தோடா நிற்பவும் நேர்ந்ததொரு செவ்வியில் அவ்விரு திறத்தாரின் துன்பமும் தீரும்பொருட்டு அவர்களைச் சந்து செய்வித்தற்கு அவ்விருவர்க்கும் கேண்மையுடைய பேராற்றல் படைத்த மன்னன் தன்னுடைய பெரும்படையோடு வந்து அப்போர்க்களத்தே கூடினாற் போன்று கடிய சூறைக்காற்றொன்று வான வெளியின்கட்டோன்றி இடம்பட விரிந்து வீசி நிலவுலகத்தையே புரட்டிவிடு மாப் போலே பெருவலியுடையதாகிப் பாறைக் கற்களையுடைய கடலைப் பருகி உயர்ந்த நீர் நிரம்பிய முகில்கள் சொரியும் நெகிழ்ச்சியிலாத மழைக் காலோடு எட்டுத்திசைகளினின்றும் எதிரெதிர் மோதிக் கண்டோர் அஞ்சி நடுங்கும்படி தோன்றாநிற்றலாலே என்க.
 
(விளக்கம்) தாக்குநர் - மண்ணசையால் வந்து தாக்கும் மன்னன் படைஞர். இவர் யூகி முதலியோர்க்குவமை. நோக்குநர் அப்படையை எதிர்க்கும் படைஞர் என்க. இவர் பிரச்சோதனன் முதலியோர்க்குவமை என்க. இங்ஙனம் செய்யும் போர் வஞ்சித்திணை எனப்படும். என்னை,
"எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே"
(தொல் - புற - 7) என்பவாகலின் என்க. பெருவலிக் கிளையினின்றும் படைவந்து கூடுதல் போன்றென்க. மறிக்கும் - புரட்டும். பார் - பாறை. பவ்வம் - கடல். கொண்மூ - முகில். கால் - மழைக்கால். கடுவளி - சூறைக்காற்று.