உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           அரும்புன லாடா தகவயி னொழிந்த
          பெரும்பரி சாரத்துப் பெண்டி ரெல்லாம்
    125    நறுநெய் தோய்ந்த நார்நூல் வெண்டுகிற்
          செறிமென் கச்சை சேர்ந்த வல்குலர்
          அசல மஞ்ஞையி னணிநிறந் தழீஇப்
          பசலை பாய்ந்த திதலைத் தித்தி
          அசைந்த வவ்வயி றடைமத் தாழ்ந்த
    130    கொடுங்காற் குண்டிகைக் கொட்ட மேய்ப்ப
          அறாஅ தொழுகு மம்முலை யாரம்
          பொறாஅ வாயினும் புடைத்த லானார்
 
                    (இதுவுமது)

                    123 - 132: அரும்.........ஆனார்

 
(பொழிப்புரை) நீர்விழாவின்கண் அரிய நீராடற்கு வாராமல் இல்லங்களிலே தங்கியிருந்த பெரியபணிமகளிர்கள் எல்லாம் நறிய நெய் தோய்ந்த நாரானியன்ற வெள்ளைத் துகிலையும், இறுக்கியாத்த கச்சையினையும் உடைய அல்குலையுடையராய், மலையில் உறையும் மயில்கள்போன்று பல்வேறு அழகியநிறத்தைத் தழுவிப் பொன்னிறம் பாய்ந்த தேமலாகிய திதலையையுடைய சுருங்கிய, அழகிய தம் வயிறு தம்பால் பொருந்தும்படி தூங்காநின்றனவும், வளைந்த காலையுடைய குண்டிகையினின்று இடையறாது ஒழுகும் நீர்த்துளி போன்றனவும் தமது அழகிய முலைக்கண் அணியப்பட்டனவுமாகிய முத்துமாலைகள் அசைந்து புடைத்தலையே பொறாதனவாயிருந்தும் தம் கைகளாலே புடைத்துக் கோடலை ஒழியாராகி என்க.
 
(விளக்கம்) பெரும்பரிசாரம் - அடிசிற்பணி. அடிசிற்பணி செய்பவராகலின் ஆடையில் நெய்தோயிந்திருந்தது என்பது கருத்து. அசலம் - மலை. மலை - இல்லங்கட்குவமை. பசலை - பொன்னிறம். திதலைத்தித்தி - இருபெயரொட்டு. அசைந்த - இளைத்த. அஃதாவது சுருங்கிய. வயிறு தம்பால் தாழ்ந்த முலையாரம் இடையறாது புடைத் தலையே பொறா என்றவாறு. முலைக்கணின்று தூங்கிப் புடைக்கும் முத்துகளுக்குக் குண்டிகையினின்றும் ஒழுகும் நீர்த்துளிகள் உவமை ஆரம்புடைத்தற்கே பொறாத வயிற்றில் கையாற் புடைத்தனர் என்றிரங்கிய படியாம். குண்டிகை - நீர்க்கரகம்.