உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           ஆற்றல் வேந்த னற்ற நோக்கி
          வேற்று வேந்தர் புகுந்தன ருளர்கொல்
    135    கூற்ற வேழங் குணஞ்சிதைந் ததுகொலென்
          றீற்றுப் பெண்டி ரிளமகத் தழீஇ
          ஊற்றுநீ ரரும்பிய வுள்ளழி நோக்கினர்
          காற்றெறி வாழையிற் கலங்கிமெய்ந் நடுங்கி
          ஆற்றேம் யாமென் றலறின ரொருசார்
 
              (இதுவுமது)

               133 - 139: ஆற்றல்........ஒருசார்

 
(பொழிப்புரை) இனி ஒருபக்கத்தே அணுமையில் மகப்பெற்றுள்ள மகளிர் "அந்தோ! ஆற்றல் மிக்க நம்மரசன் இல்லாத செவ்வி தேர்ந்து பகைமன்னர் நகரிலே புகுந்து இங்ஙனம் செய்தனரோ" என்றும், கூற்றுவனை ஒத்த நளகிரி தான் மீண்டும் வெறிகொண்டு விட்டதோ?" என்றும் ஐயுற்றுப் பெரிதும் அஞ்சித் தாமீன்ற இளங் குழவிகளைத் தழுவிக்கொண்டு உள்ளத்தின் அழிவைப் புலப்படுத்தி ஊறாநின்ற கண்ணீர் அரும்பாநின்ற பார்வையினையுடையராய், சூறைக்காற்றாற் றாக்கப்பட்ட வாழைகள் போன்று நிலைகலங்கி உடல் நடுங்கி "இனி யாங்கள் இத்துன்பத்தைப் பொறுக்ககிலோம்! என்று அலறியழாநின்றனர்; என்க.
 
(விளக்கம்) அற்றம் - ஊரிலில்லாத செவ்வி. வேற்றுவேந்தர் - பகையரசர். கூற்றவேழம்: உவமைத்தொகை; நளகிரி ஈற்றுப் பெண்டிர் - மகவீன்றுள்ள மகளிர். மக - மகவு. இம்மகளிர் நீர் விழாவிற்குச் செல்லாமைக்கு ஈற்றுப்பெண்டிர் என்றது குறிப்பேதுவாய் நின்றது.