உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
         
    145    தவழும் புதல்வரை யொருகையாற் றழீஇப்
          பவழஞ் சேரந்த பல்கா ழல்குலர்
          அவிழ்ந்த பூந்துகி லங்கையி னசைஇ
          நகைப்பூங் கோதையொடு நான்ற கூந்தற்கு
          மிகைக்கை காணாது புகைத்தீ யெறிப்பப்
    150    படைத்தோன் குற்ற மெடுத்துரைஇ யிறக்கேம்
          அங்கித் தேவ னருளென வயன்மனைப்
          பொங்குநீர்ப் பொய்கை புக்கன ரொருசார்
 
                (இதுவுமது)

                 145 - 152: தவழும்..........ஒருசார்

 
(பொழிப்புரை) ஒருபக்கத்தில் பவழம் விரவிய பலவாகிய கோவைகளையுடைய மேகலையணிந்த அல்குலையுடைய தாயர் சிலர் தவழா நின்ற தம் இளங்குழவியை ஒருகையாலணைத்துக் கொண்டு அவிழ்ந்து நெகிழாநின்ற தமது அழகிய ஆடையை மற்றோர் அழகிய கையாற் கட்டிக்கொண்டு ஒளிருகின்ற மலர்மாலை யோடே சரிந்து விழாநின்ற தங்கூந்தலைத் தாங்கிக் கோடற்கு மற்றொரு கை காணப்பெறாமையாலே அக்கூந்தலைப் புகையையுடைய தீ சுட்டெரியா நிற்றலாலே தம்மை இங்ஙனம் குறைந்த கைகளோடு படைத்த படைப்புக் கடவுளின்குற்றத்தை எடுத்துக்காட்டித் "தீக்கடவுளே எளியேம் இறந்துபடு வேம்! எம்மைப் பாதுகாத்தருள்க!" என்று வேண்டுவாராய்த் தம் மனைய யலில் உள்ள மிகுந்த நீரையுடைய குளத்தின்கண் புகுவாராயினர் என்க.
 
(விளக்கம்) பவழத்தாலாய பல்காழ் என்க. காழ் - வடம்; கோவை. இவ்வாறு கேடுநேர்ந்த காலத்தே தம்மைப் பாதுகாத்துக் கோடற்கு இரண்டுகைகள் போதாமையினாலே தற்காப்புக்கின்றியமையாத உறுப்புக்களை (இன்னுஞ் சிலகைகளை)ப் படையாமை படைப்போன் குற்றம் என்பது கருத்து. தேவன் - விளி. அயலிலுள்ள மனைப்பொய்கை என்க.