உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           பறைந்திடை சோர்தரு பசலை வெண்ணரைக்
          குறைந்த கூந்தலர் கோசிகம் போலப்
    155    புள்ளி விதிர்த்த வுள்ளுறு மேனியர்
          பைசொரிந் தன்ன பாலி றோன்முலை
          நரைமூ தாட்டியர் நடுக்க மெய்திக்
          காலிடு தளர்ச்சியர் கண்பிற ராகக்
          கோலொடு தளர்ந்து கூட்டுந ரின்றி
    160    ஆதி முற்றத்து வேதிகை முட்டிச்
          சுழலு நெஞ்சமொடு துயர மெய்தி
          அழலின் முற்ற மடைந்தன ரொருசார
 
                      (இதுவுமது)

               153 - 162: பறைந்து..........ஒருசார்

 
(பொழிப்புரை) மற்றொரு பக்கத்தே, தேய்ந்து இடையிடையே உதிரா நின்ற நிறமழுங்கிய வெளிய நரையினையுடைய குறைந்து போன கூந்தலையுடையவரும் பழம்பட்டாடையிற்போல இடையிடையே புள்ளிவிழுந்த வற்றிய உடம்பினையுடையவரும், வறும்பை போன்று பால் இல்லாது தோலாய்த் தூங்காநின்ற முலையினையுடையவரும் ஆகிய நரை மூதாட்டியர், நடுக்கமுற்றுக் கால் பெயர்த்து வைக்கின்ற தளர்ச்சியை யுடையராய்க் கண் குருடானமையாலே பிறரே தமக்குக் கண்ணாகக் கைக்கோலோடு தளர்ந்து சென்று தம்மைப் பிறவிடங்களிலே கொண்டு சேர்ப்பாருமின்றி இல்லத்தின் முதன் முற்றத்தேயுள்ள திண்ணை களில் முட்டிக் கொண்டு சுழலாநின்ற நெஞ்சத்தோடே துன்பமுற்றுத் தீயில்லாத முன்றிலைச் சென்றடைவாராயினர்; என்க.
 
(விளக்கம்) பறைந்த - தேய்ந்த. பசலை - நிறங்கெட்ட. பறைந்த கூந்தலர், இடைசோர்தரு கூந்தலர், நரைக் கூந்தலர் குறைந்த கூந்தலர் எனத் தனித்தனி கூட்டுக. முதியோர் மேனியில் புள்ளி விழுதலியல்பு. பழம் பட்டாடைகளினும் புள்ளி விழுதலியல்பு. உள்ளுறுதல் - வற்றுதல். உள்ளிடு பொருளைச் சொரிந்து விட்ட வறும்பையன்ன முலை என்க. பிறர் இயங்கும் ஒலிகேட்டே இயங்குதலானே கண்பிறராக என்றார். கூட்டுநர் - அழைத்துப் போவோர். வேதிகை - திண்ணை.