உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           சீப்புள் ளுறுத்துத் திண்ணெழுப் போக்கிக்
          காப்புள் ளுறுத்த கடிமதில் வாயிற்
    165    கால்கடி யாளர் வேல்பிடித் தோடி
          ஆணை யாணை யஞ்சன்மின் கரவொடு
          பேணல் செல்லாது பெருந்தீப் படுத்த
          நாணில் பெண்டிரை நாடுமின் விரைந்தென
          ஆய்புகழ் வேந்த னரசத் தாணிக்
    170    கோயில் காவல் கொண்டன ரொருசார்
 
               (இதுவுமது)

               163 - 170: சீப்பு..........ஒருசார்

 
(பொழிப்புரை) ஒரு பக்கத்தே, சீப்பு என்னும் தடைமரத்தை அகத்தே அணைத்தும் திண்ணிய எழு என்னும் தடைமரத்தைப் புறத்தே செருகியும் காக்கும் காவலையுள்ளிட்டகாவல் பலவற்றையும் உடைய மதிலின்கண் அமைந்த வாயிலைக் காற்றெனச் சுழன்று காக்கும் காவலர் வேலேந்தி விரைந்தோடி, "இஃது அரசன் ஆணை அரசன் ஆணை! யாரும் அஞ்சாதேகொண்மின்! நகரத்தைப்பாதுகாத்தல் செய்யாமல் வஞ்சநெஞ்சத்தோடு இங்ஙனம் நகரின்கண் பெருந்தீயை விளைவித்த நாணமற்ற பெண்டிரை விரைந்து தேடிப் பிடியுங்கோள்!'' என்று அழகிய புகழையுடைய மன்னனுடைய அரசிருக்கை அத்தாணி மண்டபத்தையுடைய அரண்மனையைக் காவல்மேற் கொண்டனர் என்க.
 
(விளக்கம்) சீப்பு - கதவிற்கு அகத்தே அணைக்கும் தடைமரம், எழு - புறத்தே அணைக்கும் தடைமரம். காவலை உள்ளிட்ட காவலையுடைய மதில் என்க. கால் - காற்று. கரவு - வஞ்சம். கோயில் - அரண்மனை.