உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           எப்பான் மருங்கினு மப்பா லவரவர்
          பெருந்துய ரெய்திக் கரிந்துகண் புதைப்ப
          நறுநெய் பயந்த நன்னகர் முத்தீ
          மறுமைக் கெண்ணிய மயலறு கிரிசை
    175    அந்தணர் சேரியு மருந்தவர் பள்ளியும்
          வெண்சுதை மாடமும் வேந்தன் கோயிலும்
          தெய்வத் தானமொ டவ்வழி யொழியத்
 
               (இதுவுமது)

                 171 - 177: எப்பால்..........ஒழிய

 
(பொழிப்புரை) எல்லாப்பக்கங்களினும் அங்கங்கே உள்ள மாந்தர் இங்ஙனமே அவரவர் தனித்தனியே பெரிய துன்பத்தை எய்தி உடல் கரிந்து கண்களைப் பொத்திக் கொள்ளா நிற்ப, நறிய நெய்யானே தோற்றுவிக்கப்பட்ட மூன்றுவகையான வேள்வித் தீயினையுடைய வேள்விச்சாலைகளையுடைய இம்மையிலேயன்றி மறுமைக்கண்ணும் நலமுறுதலைக் கருதிய மயக்கமற்ற செயல்களையுடைய பார்ப்பனர் வாழும் சேரியும், செயற்கரிய தவத்தை மேற் கொண்ட துறவோரிருக்கையும், தீப்பற்றுதற்கியலாத வெள்ளிய சுதை யையுடைய மாடங்களும், மன்னவனுடைய அரண்மனையும், திருக் கோயில்களும், இன்னோரன்ன பிறவுமாகிய கட்டிடங்கள் ஒழிய என்க.
 
(விளக்கம்) நன்னகர் என்றது வேள்விச்சாலையை. அந்தணர் சேரியும் அருந்தவர்பள்ளியும் தீயிடப்படாமல் யூகியால் விலக்களிக் கப்பட்டன என்க. சுதைமாடம் முதலியன தீப்பற்ற வியலாதன என்க. இதனோடு கண்ணகியார் சினந்து எரித்தபோதும்

    ''பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர், மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க'' என்று தீக்கடவுட்குக் கட்டளையிட்டமையையும் நினைக.