உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           தண்ணறுங் காழகி னுண்ணயிர் கூட்டி
          அம்புகை தவழ்ந்த வரக்குவினை மாடமும்
    180    வெம்புகை தவழ்ந்து வேந்துகண் புதைப்ப
          வால்வளை மகளிர் மணிநிலத் தமைந்த
          கால்வளர் சாலி யாய்பத வரிசிப்
          பொன்செய் கிண்கிணிப் புதல்வ ராடும்
          கம்பலை வெரீஇக் கவரல் செல்லா
    185    அம்பலக் கொடுங்கா ழசைத்த யாப்பின்
          கிடையும் பூளையுங் கிழியும் பஞ்சியும்
          படையமைத் தியற்றிய மடையணிப் பள்ளியுட்
          பிணிக்குரல் பயிற்றும் பேடையைக் காணா
          தணிக்கட் புறவி னைம்பாற் சேவல்
    190    எரிவளை புகையிடை யிறகுவிரித் தலற
          மேலெழு பேடை மீண்டுவந் தாடக்
          கீழெழு செந்தீக் கிளைபிரித் தழற்ற
          மாமயிற் பெடையொடு மகளிர் நாப்பட்
          டூவி மஞ்ஞை தோகைவிரித் தக
 
                (இதுவுமது)

                 178 - 194: தன்..........அகவ

 
(பொழிப்புரை) பண்டு தண்ணிய நறுமணமுடைய வயிரமேறிய அகிற்கட்டையோடு கண்ட சருக்கரையும் கூட்டிப் புகைத்த இனிய மணமுடைய புகை தவழ்ந்த அரக்கால் அமைக்கப்பட்ட மாடங்களும், இப்பொழுது வெப்பமுடைய புகை தவழ்ந்து ஞாயிற்றின் கண்களை மறையாநிற்பவும், அங்குறைந்த அழகிய கண்ணையுடைய புறவினத்து அழகிய மயிரையுடைய சேவல் சங்குவளையலணிந்த மகளிராலே அழகிய முற்றத்திலே உலர்த்தப்பட்ட தண்டு வளரா நின்ற சாலி நெல்லினது நுண்ணிய உணவாகிய அரிசியை ஆங்கு அம் மகளி ருடைய பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணியணிந்த பிள்ளைகள் ஆடலாலே உண்டான ஆரவாரத்திற்கு அஞ்சி, இரையாகக் கவரமாட்டா மையாலே, பொதுமன்றத்தே வறிதே சென்று, ஆங்கு வளைந்த கழிகளைக் கட்டிய கட்டின்மேல் நெட்டியும் பூளைப்பூவும் துணியும் பஞ்சுமாகிய இம்மெல்லியற் பொருள்களாலே படுக்கை அமைத்து இயற்றப்பட்ட மூட்டு வாயின் அணித்தாகிய தனது கூட்டின்கண் இருந்து துன்பக்குரல் மிழற்றுந் தன் பெடைப்புறாவினைக்காணாமல் தீயினது வளைகின்ற புகையினூடே தன் சிறகினை விரித்துப் பறந்து அலறாநிற்பவும், ஒருசார் தன்கூட்டி னின்றும் இரைதேடற்கு வானத்தே எழுந்துபோன பேடைப்புறா மீண்டும் வந்து அக்கூட்டினைக் காணாமல் அங்கும் இங்கும் பறந்து ஆடா நிற்பவும், கீழே எழுந்து எரியாநின்ற சிவந்ததீயானது தம் மினத்தைப் பிரித்துவிட்டுச் சுடுதலானே தூவியையுடைய பெரிய மயிலாகிய மஞ்ஞைகள் தம் பெடை களோடு மகளிர்குழுவின் நடுவே சென்று தமது தோகையை விரித்துக் கொண்டு வருந்தி அகவா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) ண்ணயிர்- கண்டசருக்கரை. மணி - அழகு. கால் - தண்டு. சாலி - நெல். பதம் - உணவு. வால்வளை மகளிர் புதல்வர் என்க. அரிசி கவரல் செல்லாது என்க. பிணிக்குரல் - பிரிவுத் துன் பத்தைப் புலப்படுத்தும் குரல். அம்பலம் - ஊர்ப்பொது மன்றம். யாப்பு - கட்டு. கிடை - நெட்டி. கிழி - துணி. படை - படுக்கை. மடை- மூட்டு வாய். ஐம்பால் - மயிர். மாமயிலாகிய மஞ்ஞை என்க.