உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
         
    195    ஏற்றுரி முரசி னிறைவன் மூதூர்க்
          காற்றுத் துணையாகக் கனலெரி கவரப்
          படலணி வாயின் மடலணி வேயுள்
          இடையற வில்லா விருக்கையில் பொலிந்த
          பன்னா றாயிரம் பாடிக் கொட்டிலும்
    200   முந்நூ றாயிர முட்டிகைச் சேரியும்
          ஐந்நூ றாயிரங் கம்மவா லயமும்
          சேனை வேந்தன் சிறப்பினொ டிருந்த
          தானைச் சேரியுந் தலைக்கொண் டோடிக்
          கானத் தீயிற் கடுகுபு திசைப்ப
    205    ஏனை மாடமு மெழுந்தன்றா லெரியென்
 
               (இதுவுமது)

               195 - 205: ஏற்றுரி..........எரியென்

 
(பொழிப்புரை) இங்ஙனமாக ஏற்றுரி போர்த்த முரசத்தையுடைய மன்னவனாகிய பிரச்சோதனனுடைய தலைநகராகிய உஞ்சையின் கண் காற்றைத் துணையாகக்கொண்டு கனலாநின்ற தீப் பற்றுதலானே அந்நகரத்தே படல் இட்டவாயில்களையும் பனை தெங்கு முதலிய வற்றின் மடலால் வேயப்பட்ட கூரைகளையுடையனவும் இடையறாது தொடர்புபட்ட குடியிருப்பினாலே பொலிவுற்றனவும் ஆகிய பதினா றாயிரம் பாடிக் கொட்டில்களும், முந்நூறாயிரம் கொல்லர் சேரிக்குடில் களும், ஐந்நூறாயிரம் தொழிற்குடில்களும் சேனாபதி சிறப்போடு குடி யிருந்த படைஞர் சேரியும், ஏனைய மாடங்களும் ஆகிய இவற்றி லெல்லாம் அத்தீக் காட்டுத் தீப்போன்று விரைந்துபரவி மாந்தரெல்லாம் கையற்றுத் திகைக்கும்படி எழுந்து எரிவதாயிற்று; என்க.
 
(விளக்கம்) கனலெரி - வினைத்தொகை. படல் - மூங்கிற் பிளப்பு முதலியவற்றாலாய கதவு. மடல் - பனையோலை முதலியன. பாடிக் கொட்டில் - படைமறவர் குடில். முட்டிகைச்சேரி - கொல்லர்சேரி: குயச் சேரியுமாம். கம்மவாலயம் - தொழில் செய்யுமிடமாகிய கொட்டில். சேனை வேந்தன் - சேனாபதி, கானத்தீ - காட்டுத்தீ. எழுந்தன்று - எழுந்தது. அவ்வெரி என்க.

43. ஊர் தீயீட்டது முற்றிற்று.