உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
         
     35    கம்மப் பல்கலம் விம்மப் பெய்த
           பொறியமை பேழையொடு பூந்துகி றழீஇக்
           குறிவயி னின்ற குறள்வயி னோக்கார்
           சோருங் கூந்தலர் வாருங் கண்ணினர்
           ஆருந் துன்பமொ டூர்வயி னோக்கி
     40    வீழ்பூங் கொடியின் விரைந்துசெல் வோரும்
 
                      (இதுவுமது)
           35 - 40 :  கம்மப்..........செல்வோரும்
 
(பொழிப்புரை) வேறு சில மகளிர், தமது அரிய தொழிற்றிறனமைந்த பலவாகிய அணிகலன்களை நிரம்பப் பெய்த இலச்சினையிடப்பட்ட பேழைகளையும், தமது அழகிய ஆடைகளையும், சுமந்து கொண்டு தாம் குறிப்பிட்ட விடத்தே நிற்கின்ற தம் பணியாளராகிய குறளர்களையும் நோக்காராய்ச் சோருகின்ற கூந்தலையும் நீர் ஒழுகும் கண்களையும் உடையராய் நிறைந்த துன்பத்தோடே நகரத்தை நோக்கித் துவண்டு வீழாநின்ற பூங்கொடி போல ஒல்கி விரைந்து செல்லாநிற்போரும் என்க.
 
(விளக்கம்) கலப்பேழை - ஆடை முதலியவற்றையும் துன்பமிகுதியால் நினையமாட்டாராய் என்பது கருத்து. குறள் - குறளர்.