உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
44. பிடியேற்றியது |
|
75 காற்றொடு
கலந்த கார்முழக்
கின்னிசை
மாற்றுக்களிற் றெதிர்வென மறித்தன
மயங்கி
அந்தப் போதிகை யிடைபரிந்
தழியக்
கந்துமுதல் கிழித்துக் காரென
வுரறி
மேலியன் முறைவர் நூலிய லோசை
80 எஃகெறிந் தன்ன வெஃகறு
செவிய
அடக்கவு மடங்காப் புதுக்கோள்
யானை
வால்வளை மகளிரொடு மைந்தரை
யுழக்கி
ஏரிருங் குலிகப் புனல்பரந்
திழிதரும்
காரிருங் குன்றிற் கவின்பெறத் தோன்றக்
|
|
(யானைகளின்
செயல்)
75 - 84 : காற்றொடு..........தோன்ற
|
|
(பொழிப்புரை) அவ்வியானைகளுள்
வைத்துப் புதியனவாகக் காட்டினின்றும் பற்றிக் கொணரப்பட்ட யானைகள்
சூறைக் காற்றொடு கலந்தொலிக்கும் கரியமுகின் முழக்கத்தைக் கேட்டு இம்
முழக்கம் தம் பகைக்களிறுகள் தம்மை எதிர்த்தற்பொருட்டுப் பிளிறும்
ஆரவாரம் போலும் என்று கருதித் திரும்பிப்பார்த்து யாதொன்றும்
தோன்றாமல் மனமயக்கமடைந்து தமது பின்னங்காற் சங்கிலிகள் நடுநடுவே
அறுந்தொழியும்படி செய்து தம்மைக் கட்டியுள்ள தறிகளையும்
மருப்பானே குத்திப்பிளந்து முகில்போலத் தாமும் முழங்கித் தம்மேலிருந்து
முறையே இயங்குவிக்கும் பாகர் கூறுகின்றகுறிப்பு மொழிகள் தம்மை வேலாற்
குத்தினாற்போன்று துன்புறுத்த அவற்றை விரும்பாத செவிகளையுடையவாய்
அப்பாகர் தம்மைத் தோட்டி முதலியவற்றாற் குத்தி அடக்கவும், அடங்காவாய்
ஆங்குக் குழுமியுள்ள சங்கவளையலணிந்த மகளிர்களோடு ஆடவர்களையும் துவைத்துக்
குருதி தோய்ந்தனவாகச் சாதிலிங்கங் கரைத்த நீர் பரவியொழுகாநின்ற
கரிய பெரிய மலைகள் போன்று அழகுண்டாகத் தோன்றாநிற்ப
என்க.
|
|
(விளக்கம்) மாற்றுக்களிறு -
பகைக்களிறு, கார்-முகில். எதிர்வு - எதிர்த்தல், மறித்தன திரும்பின.
அந்தப் போதிகை - பின்காற் சங்கிலி. கந்து - தறி. உரறி - பிளிறி.
முறைவர் - முறைப்படுத்தும் பாகர். எஃகு - வேல். வெஃகறு - விரும்புதலில்லாத.
புதுக்கோள் யானை - புதியனவாகப் பற்றிக் கொணரப்பட்ட யானைகள். குலிகம்
- சாதிலிங்கம். குலிகப்புனல் பரந்திழிதரும் குன்றம் -
குருதிதோய்ந்து சொட்டும் உடலையுடைய யானைக்குவமம் "அஞ்சனக்குன்றேய்க்கும்
யானை அமருழக்கி இங்குலிகக் குன்றே போற் றோன்றுமே" என வரும் களவழியும்
காண்க (7)
|