உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
         
     85    கொன்னே சிதைந்து கோவின் குறிப்புடன்
           நகரி முழக்கினு மிகையெழு தீயினும்
           அளவி லார்ப்பினு மருந்தளை பரிந்து
           கடலென வதிர்ந்து காரெனத் தோன்றி
           விடலருஞ் சீற்றமொடு வேறுபட நோக்கிக்
     90    களமெனக் கருதிக் கனன்ற வுள்ளமொடு
           நளகிரிக் கூற்ற நகர முழக்க
           எதிரெழு வோரை யதிர நூறி
           வத்தவர் கோமான் வயவர் திரிதர
           எத்திசை மருங்கினு முட்குவரத் தோன்றிய
     95    இன்னாக் காலை யொன்னா மன்னனும்
 
                   (நளகிரியின் செயல்)
            85 - 95 :  கொன்னே..........காலை
 
(பொழிப்புரை) இவ்வாரவாரத்தினிடையே நளகிரிதானும்வெருண்டு நகரத்தைச் சிதைக்கக்கூடும் என்று கருதாநின்ற உதயணமன்னனுடைய கருத்திற்கேற்பவே கூற்றமேபோன்ற நளகிரி என்னும் களிற்றியானையும் காரணமின்றியே குணஞ்சிதைந்து நகரத்தே எழும் ஆரவாரத்தானும் மிகுதியாக எழாநின்ற தீயினது ஆரவாரத்தானும் மாந்தர் செய்யும் அளவற்ற ஆரவாரங்களானும் அறுத்தற்கரிய தளையினையும் அறுத்துக்கொண்டு கடல்போன்று முழங்கிக் கருமுகில் போன்று வெளிப்பட்டுத் தோன்றி - விடுதற்கியலாத சினத்தோடே இது பகைவருடைய போர்க்களமோ என்று மாறுபடப் பார்த்து மேலுங் கனலாநின்ற நெஞ்சத்தோடே நகரத்தைச் சிதையாநிற்பவும், உதயணமன்னனுடைய மறவர் தமக்கெதிரே வருகின்ற உஞ்சை மறவரை மனம் அதிரும்படி கொன்று வீழ்த்தி வீழ்த்தி யாண்டும், திரியாநிற்பவும், இவ்வாற்றான் எல்லாத்திசைகளினும் யாவர்க்கும் அச்சம் வரும்படி தோன்றாநின்ற துயர் தருங்காலத்தே என்க..
 
(விளக்கம்) கோ - உதயணமன்னன். அவன்குறிப்பாவது இவ்வார வாரங்கேட்ட நளகிரியும் நகரத்தைச் சிதைக்கும் என்று எண்ணிய கருத்து என்க. தளை - கட்டு. நூறி - கொன்று. வத்தவர் கோமான் - உதயணன். வயவர் - மறவர். உட்கு - அச்சம். இன்னா - துயரம்.