உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
            பாய்மான் றானைப் பரந்த செல்வத்துக்
           கோமான் பணித்த குறைமற் றிதுவென
     105    ஏவ லிளைய ரிசைத்த மாற்றம்
           சேதியர் பெருமகன் செவியிற் கேட்டு
           விசும்புமுதல் கலங்கி வீழினும் வீழ்க
           கலங்க வேண்டா காவலென் கடனெனக்
           காற்றிற் குலையாக் கடும்பிடி கடைஇ
     110    ஆற்றுத்துறை குறுகிய வண்ணலைக் கண்டே
 
         (ஏவலர் செயலும் உதயணன் செயலும்)
           103 - 110 :  பாய்மான்..........கண்டே
 
(பொழிப்புரை) பாயாநின்ற குதிரைபூட்டிய தேரையுடைய படைகளையும் பரவிக்கிடக்கும் செல்வங்களையும் உடைய நங்கோமான் எங்கட்கு இட்டகட்டளை இஃதென்று ஏவலிளையர் கூறிய செய்தியை உதயணகுமரன் இனிதாகத் தன் செவியேற்று அவ் வேவலரை நோக்கி "அஞ்சவேண்டா ! வானமே இடிந்து வீழினும் வீழ்க ! வாசவதத்தையைக் காப்பது என்னுடைய தலையாய கடமையேகாண்! நுங்கள் மன்னனுக்கி தனைக் கூறுமின்" என்று அவரைப்போக்கி அப்பொழுதே சூறைக்காற்றானும் தன் ஆற்றல் குலையாத கடிய நடையையுடைய பத்திராபதி என்னும் பிடியானையைச் செலுத்தி வாசவதத்தையுறையாநின்ற ஆற்றுத் துறையினை அணுகாநின்றவனைக் கண்டு என்க.
 
(விளக்கம்) குறை - வேண்டுகோள். மாற்றம் - செய்தி. சேதியர் பெருமகன் - உதயணன், செவிக்கு அமிழ்தென இனிதாகக் கேட்டென்பதுபடக் கேட்டென்னாது செவியிற் கேட்டு எனவேண்டாகூறி வேண்டியது முடித்தார். கடன் என்று கூறுமின் என விடுத்து என்க, கடைஇ - செலுத்தி, அண்ணல் - உதயணன்.