உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
            பெரியோர்க் குதவிய சிறுநன் றேய்ப்பக்
           கரவாது பெருகிக் கையிகந்து விளங்கும்
     140    உள்ளத் துவகை தெள்ளிதி னடக்கி
           மதர்வை வண்டொடு சுரும்புமணந் தாடும்
           குயில்பூங் கோதையொடு குழற்குரல் வணரும்
           கயிலெருத் திறைஞ்சிக் கானிலங் கிளைஇ
           உருகு நெஞ்சத் துதயண குமரனைப்
     145    பருகும் வேட்கையள் பையுள் கூர
           நிறையு நாணு நிரந்துமுன் விலங்க
           நெஞ்சு நேர்ந்தும் வாய்நேர்ந் துரையா
           அஞ்சி லோதியை நெஞ்சு வலியுறப்
 
                 வாசவதத்தையின் நிலைமை
       138 - 148 :  பெரியோர்க்கு..........அஞ்சிலோதியை
 
(பொழிப்புரை) காவலர்வேண்டுகோள்கேட்டு, வாசவதத்தை சான்றோர்க்குச் செய்த சிறிய உதவி நாளடைவிலே மிகவும் பெரிதாகப் பெருகுதல்போன்று தன்னுள்ளத்தே கரந்து வைத்திருந்த மகிழ்ச்சியானது இப்பொழுது மறைக்கப்படாதபடி பெருகி அளவு கடந்து விளங்காநிற்ப அதனையும் பிறர் அறியாதபடி தன் ஆற்றலானே உள்ளத்தின்கண்ணேயே தெளிவுபட அடக்கிக் கொண்டு மயக்கமுடைய பெடைவண்டோடு ஆண்வண்டு புணர்ந்து களித்தாடுதற்கு இடனான, அழகாகப் புனைந்த மலர்மாலையோடே தனது கொத்தாகிய கூந்தல் சுருளிட்டுக்கிடக்கும் அணிகலன் அணிந்த தன் எருத்திறைஞ்சிக் காலானே நிலத்தைக் கீறிக் காதலானே உருகாநின்ற தன் நெஞ்சமாகிய வாயாலே உதயணகுமரனுடைய பேரெழிலாகிய அமிழ்தத்தை வாரிப் பருகாநின்ற வேட்கையை உடையளாய்ப் பெரிதும் அல்லலுறா நிற்றலாலே, தன் நிறையும் நாணமும் நிரலே தன்னை விட்டு விலகப் பிடியேறுதற்குத் தனது நெஞ்சம் நன்குடன் பட்டும்; வாயால் தனது உடன்பாட்டைக் கூறாது நின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய அவ்வாசவதத்தையை என்க.
 
(விளக்கம்) நன்று - நன்றி. மதர்வை - மயக்கம். சுரும்பு - ஆண் வண்டு. குயில்பூங்கோதை - வினைத்தொகை. குயிலுதல் - இயற்றுதல். வணரும் - சுருளிட்டுக் கிடக்கும். கயில் - மூட்டுவாய் அணிகலனுக்கு ஆகுபெயர். பையுள் - துன்பம். கூர - மிகநேர்ந்தும் உடன்பட்டும்.