(பொழிப்புரை) வாசவதத்தையின்குறிப்புணர்ந்த
தோழியாகிய காஞ்சனமாலை அவளோடு பெரிதும் பழக்கமுடைய தனது
பார்வையாலேயே அவளுடைய இயற்கையான நாணிலையினின்றும் வேறுபடுவித்துத் தன்
கைகளாலே அணைத்துத் தாங்கி வாசவதத்தையைப் பிடியின்மேல் ஏற்றாநிற்பப்
பெருந்தகையாகிய உதயண மன்னனும் அவள் ஏற்றுதற்கிமையத் தனது
பெரிய பிடியானையை அசையாமே நிறுத்தி "முடித்தற்கரிய நமது
ஆள்வினையொன்றனை இன்று செய்து முடித்தேம்" என்று பெரிதும் உவந்து மாவடுப்
போன்ற பெரியதன் கண்கள் வாள்போன்று மிளிராநின்ற பூங்கொடிபோலும்
சாயலையுடைய அவ்வாசவதத்தையைத் தனது குடங்கையிலே தழுவிப் பிடியின்
மேலேற்றியருளினன் என்க.