உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
45. படைதலைக் கொண்டது
 
         
           பவனத் தரச னுவனித் தெறிந்த
           குந்தக் கடைமணி யுறுதலின் முரிந்த
           வலப்பா லெயிற்றின் குற்றமு மலைத்துடன்
     20    வலிந்துமேற் சென்ற கலிங்கத் தரசன்
           குஞ்சர மருப்பிற் குறியிடப் பட்டுச்
           செஞ்சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து
           மார்பினது வனப்புந் தோளினது திரட்சியும்
           நிறத்தது நீர்மையு நெடுமைய தளவும்
     25    சிறைத்துயர் நீக்கற்குச் செய்த வேடமும்
           குறிக்கொளற் கமைந்தவை பிறவுந் திறப்பட
           வாகிய லமைச்சன் யூகிக் குள்ளவை
           சாங்கிய முதுமக டான்றெரிந் துணர
           அறிவின் முன்னே செறியச் செய்த
     30    பொறியுடை யோலை பொருக்கென வீழ்த்து
 
             (உதயணன் செயல்)
          17 - 30: பவனத்து...............வீழ்த்தி
 
(பொழிப்புரை) வத்தவநாட்டு மன்னாகிய (50) உதயணகுமரன், (யூகியின் அடையாளங்களாகிய) பவனநாட்டு மன்னவன் பண்டொருகாலத்தே போர்க்களத்தின்கண்ணே (யூகியின் மேல்) குறிபார்த்தெறிந்த வேற்படையினது கடைமணி படுதலானே முரிந்துபோனமையாலே அவனது வலப்பக்கத்தின் ஒரு பல்லிலுண்டான குற்றத்தையும். (யூகி) அவனால் போராற்றிக் கொண்டே வலிந்து மேற்செல்லப்பட்ட கலிங்கத்தரசனுடைய யானையினது மருப்பினாலே குத்துண்டு விழுப் புண்பட்ட வருவாகிய குறியை அதனை மறைத்தற்குச் சிவந்த சந்தனம் பூசப்பட்ட பெருமை மிக்க அழகுடைய அவனுடைய மார்பின் அழகையும் தோளினது திரட்சியையும் நிறத்தினது தன்மையையும் உடல் நெடுமையினது அளவையும் அவன் தனது திறைத் துன்பத்தை நீக்கும் பொருட்டுப் புனைந்துள்ள வேடத் தன்மையையும் இன்னோரன்ன பிறவுமாகிய தோளாற் பெரிதும் சிறப்புடைய தன் அமைச்சனாகிய அந்த யூகியின்பாற் சிறந்தமைந்த அடையாளங்களைச் சாங்கியத்தாய் எளிதிற் றெரிந்துகோடற்பொருட்டு எதிரதாகக் காக்குந் தனது அறிவுடைமையாலே முற்படவே எழுதித் தன்பால் மறைத்து வைத்திருந்த இலச்சினையிடப்பட்ட ஓலையை வயந்தகன் காணும்படி ஞெரேலென வீழ்த்தி என்க.
 
(விளக்கம்) பவனம் - ஒரு நாடு. உவனித்து - குறிபார்த்து. குந்தம் - வேல். மலைத்து - போர் செய்து. குஞ்சரம் - யானை. அவ்வடு வினைப் பிறர் காணாதபடி செஞ்சாந்து மெழுகி மறைத்திருப்பன் என்பது கருத்து. சேடு - பெருமை. செல்வம் - திருவுடைமை. நீர்மை - பண்பு. குறிக் கொளற்கேதுவாக அமைந்தவை என்க வாகு - தோள். அறிவு எதிரதாக் காக்கும் சிறப்பறிவு. பொறி - இலச்சினை. பொருக்கென - விரைவுக் குறிப்பு. வயந்தகன் காணும்படி வீழ்த்தென்க.