உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
45. படைதலைக் கொண்டது
 
         
           மடத்தகை பொருந்திய வயத்தகை மாதரை
           நடுக்க மோம்பி விடுக்குநள் போலச்
           சார்ந்தன ளாகியவட் கோம்படைக் குறிப்பொடு
           நண்ணிய பொழுதிடைக் கண்ணிற் காட்ட
     35    வயந்தக குமரன் மறைத்து நீட்டலும்
           நயந்த நெஞ்சமொடு நன்கன மடக்கிச்
           சேற லாற்றாண் மாறினண் மறைந்தபின்
 
          (சரங்கியத்தாய் வரவும், வயந்தகன் செயலும்)
            31 - 37: மடத்தகை..........மறைந்தபின்
 
(பொழிப்புரை) மடப்ப மென்னும் பண்பு பொருந்திய கற்பு வலிமையுடைய வாசவதத்தையை அச்சமகற்றி விடை கொடுக்க வருபவள் போன்று ஆங்கு வந்து சேர்பவளாம் வாசவதத்தையை உதயணன் பால் ஓம்படை செய்யும் குறிப்போடு சாங்கியத் தாய் வந்துற்ற பொழுது உதயணன் தான் வீழ்த்த ஓலையை அவட்குக் கொடுக்கும்படி வயந்தகனுக்குத் தன் கண்ணாலே குறிப்பாகக் கூறா நிற்றலாலே, வயந்தகனும் அவ்வோலையைப் பிறர்காணாதபடி மறைத்துச் சாங்கியத் தாயின்பாற் கொடுப்ப, அதுகண்ட சாங்கியத்தாய் அவ்வோலையை விரும்பிய நெஞ்சோடு ஏற்றுக்கொண்டு அதனைப் பிறர் அறியாவண்ணம் நன்கு மறைத்துக்கொண்டு மேலே செல்லுதற் கியலாதவளாய் மற்றொரு திசையிற் சென்று மறைந்த பின்னர் என்க.
 
(விளக்கம்) மாதரை - வாசவதத்தையை. ஓம்படை - ஒப்படைத்தல். உதயணன் வயந்தகனுக்குக் கண்ணாலே கூற என்க.