உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
45. படைதலைக் கொண்டது
 
         
           அங்கண் ஞாலத் தன்புடை யோரைப்
           புன்க ணீக்குதல் புகழுடைத் தாதலின்
     40    உங்க ளன்பின் யானுறு நோயினைப்
           பைங்கண் வேழத்துப் பகடன் றீர்ந்ததிவள்
           செழுங்கடை மழைக்கண் செருக்கயல் புரைய
           உண்ணெகிழ்ந்து கலிழ்ந்த வுறாஅ நோக்கிற்
           கண்ணெகிழ் கடுநோய் கைவரு காலை
     45    ஈர்வது போலு மிருளுடை யாமத்துத்
           தீர்திற மறியேன் றேர்வுழித் தீர்திறம்
           வந்துகை கூடிற் றாகலி னின்றிது
           நீக்கனின் கடனென மாக்கே ழிரும்பிடி
           அந்தோற் செவியினுண் மந்திர மாக
     50    வழிமொழி கூறிய வத்தவர் பெருமகன
 
              (உதயணன் செயல்)
         38 - 50: அங்கண்..........பெருமகன்
 
(பொழிப்புரை) உதயணகுமரன் கருநிறமுடைய பெரிய "பிடி யானையினது அழகிய தோற் செவியின்கண் மறைமொழியாக, பிடியே கேள்! அழகிய இடமமைந்த இப்பேருலகத்தே அன்புடையோர் உற்ற இடையூற்றினை அகற்றுதல் மிகவும் புகழுடையதொரு செயலாகுங்காண்! உங்கள் இனத்தின்பால் யான் கொண்ட அன்பு காரணமாக யான் எய்திய துன்பத்தைப் பசிய கண்ணையுடைய நளகிரி என்னும் யானையே அன்றொரு நாள் தீர்த்தருளியது. இந்த வாசவதத்தையினது செழிப்புடைய குளிர்ந்த கண்கள் போர்புரியும் கயல் மீன்கள்போன்று மிளிர்ந்து அகம் நெகிழ்ந்து என் பொருட்டு அழுது, என்னை அயலானைப் பார்க்குமாறு போலே பார்த்த பார்வையை யான் கண்டமையாலே என் கண்களும் கனிந்தழுதற்குக் காரணமான கடிய காமநோய் என்னெஞ்சத்தே மிகுந்து வரும்பொழுது, அந்நோய் தானும் என்னை அரித்துத் தின்பதுபோல வருத்துகின்ற இருள் மிக்க நள்ளிரவிலே அந்நோய் தீர்தற்கு வழியொன்றும் காணமாட்டாமல் ஆராயுங்காலத்தே அந்நோய் தீர்தற்குரிய வழி ஒன்று இன்று தானே வந்து கைகூடுவதாயிற்று. இந்த நெறியை மேற்கொண்டு இத்துயரத்தை நீக்கி என்னை உய்யக்கோடல் நினது தலைசிறந்த கடமையே ஆகுங்காண்!" என்று தனது வேண்டுகோள் மொழியைக் கூறியவன் என்க.
 
(விளக்கம்) புன்கண் - துன்பம். உங்கள் அன்பு - உம்மினத்தின்பால் யான் இயல்பாகவே கொண்டுள்ள அன்பு என்க. உங்கள் அன்பின் யான் உறுநோய் என்றது, தெய்வயானை காரணமாகத் தான் சிறைக்கோட்டம் புக்கதனை. அன்புடைமை தோன்றத் தறுகண்வேழம் என்னாது பைங்கண் வேழம் என்றான். வேழம் ஈண்டு நளகிரி, தன்னை யானை முன்போக்கிய செயலுக்கு அற்றைநாள் வாசவதத்தை பரிந்து கண்ணீருகுத்தமையைத் தானும் அறிந்திருந்தமையால் உண்ணெகிழ்ந்து கழிந்த நோக்கு என்றான். உறா அநோக்கு, அயலாரை நோக்குமாறு நோக்கும் நோக்கம். அந்நோக்கமே அவள் குறிப்பினைத் தான் உணர்தற்கு ஏதுவாய்த் தன்னை வருத்திற்று என்பான் உறாஅநோக்கின் கடுநோய் கைவருகாலை என்றான். இக்கருத்தோடு

"ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள" (குறள்-1099)

எனவும்,
"செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போ னோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு" (குறள் - 1097)

எனவும் வரும் திருகுறள்களையும் ஒப்பிடுக. தீர்திறம், நோய் தீரும் வழி. அஃதாவது வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு, தன்னூர்க்குப் போதலாகிய இவ்வழி என்றவாறு. வழிமொழி, வேண்டுகோள்.