உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
45. படைதலைக் கொண்டது |
|
கழிபோக் கெண்ணிக் கடவா
நின்றோன்
கம்பலைக் கவற்சியிற் கடுங்கொளைக்
கொளீஇ
அம்பொடு பிடித்த வில்ல
னாகி ஒராஅ
வுரிமைக் கொருபுடை வரூஉம் 55
வராக னென்னும் வயவனைக்
கண்டே
வந்தனை யிப்பா லஞ்ச
லார்ப்போர்
கள்வ ராதலு முண்டென்
கையகத்
தொள்வரிச் சிலையு முடுவார்
பகழியும்
தந்தனை யாகியென் றகைவா ளேந்தி
60 ஊறுண் டெனினு முழையிற்
பிரியா
தேறிவ் விரும்பிடி யென்னொ
டென்றுதன்
நெஞ்ச நெகிழா வஞ்சமனத்
தடக்கி
அன்பின்று கிளந்த வருளில் பொருண்மொழித
|
|
(இதுவுமது)
51 - 63: கழிபோக்கு..........பொருண்மொழி்
|
|
(பொழிப்புரை) இனி, ஈண்டு நிற்றல்
ஏதமாகும்; விரைந்து செல்லுதல் வேண்டும் என்று கருதி யானையைச் செலுத்தத்
தொடங்கிய உதயணன், அண்மையிலே நீங்குதற் கியலாத உரிமை
மகளிரைக் காக்கும்பொருட்டு, ஆண்டெழுந்த ஆரவாரத்தாலே கவலையுற்று
வில்லின்கண் கடிய நாணை ஏற்றி அம்பினைப் பிடித்த கையையுடையனாகி
அம்மகளிர் குழுவின் ஒரு பக்கத்தே வாராநின்ற வராகன் என்னும்
வீரனைக் கண்டு "நண்பனே! வந்து சேர்ந்தனை! நன்று! நன்று! இனி நீ
அஞ்சாதே கொள்! ஆங்கு ஆரவாரிப்போர் ஒரோவழி கள்வராயிருத்தலுங் கூடும்;
ஆதலால் நின்கையின்கணுள்ள ஒளியுடைய வரிந்து கட்டிய வில்லினையும்
உடுவமைந்த நெடிய கணையினையும் என் கையிலே தந்து என் கையிலுள்ள
பகைவரைத் தகைக்கும் இவ்வாளை நீ நின் கையிலேந்திப்
பின்னரும் இடையூறுண்டாயினும் என்பக்கத்திருந்து பிரியாமைப் பொருட்டு
இந்தப் பெரிய பிடியானையில் ஏறி என்னோடமர்வாயாக!" என்று தன்
மனமிரங்காமைக்குக் காரணமான வஞ்சத்தை அவன் உணராதபடி தன் மனத்திலேயே
திறம்பட மறைத்துக்கொண்டு அன்பும் அருளும் இலவேனும் அவையுடையன போன்று
கூறப்பட்ட பொருள்கரந்த மொழியைக் கேட்டு என்க.
|
|
(விளக்கம்) கழிபோக்கு - மிகவும் விரைந்து செல்லும செலவு, கம்பலை யாலுண்டான கவற்சி
என்க. கவற்சி - கவலை. கொளை - நாண். ஒராஅ உரிமை
தன்னைவிட்டகலாத உரிமை எனினுமாம். வயவன் - மறவன். வராகன் இவன்
வாசவதத்தை முதலியோரைக் காக்கும் மறவருட் டலைவன். உரிமைக்கு -
உரிமையைக் காக்கும் பொருட்டென்க. உடு - அம்பின்கண் நாணிற் பொருத்தும்
ஓருறுப்பு. தகைவாள் - வினைத்தொகை. நெகிழாமைக்குக் காரணமான
வஞ்சம் என்க. அன்பும் அருளும் இலவேனும் அவை யுளபோன்று மொழிந்த
மொழி யென்க.
|