உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
45. படைதலைக் கொண்டது
 
         
           தோட்டியின் வணக்கம் வேட்டவன் விரும்பிக்
     65    கொடுஞ்சிலை கொடுத்துக் கூப்பிய கையன்
           கடுஞ்செல லிரும்பிடிக் கான்முதற் பொருந்தி
           ஏற்றம் விரும்பலு மிளம்பிடி யெடுப்பி
           ஆற்றன் மன்னன் காற்றெனக் கடாவ
           விசையின் வீழ்ந்து வெருளி யாற்றான்
     70    ஆய்பெருங் கடிநகர் வாயிலு நோக்கான்
           கோமக னுள்வழிக் குறுகலுங் குறுகான்
           ஓவிய முட்கு முருவியைத் தழீஇப்
           போயினன் வத்தவன் புறக்கொடுத் தொய்யெனக்
 
              (இதுவுமது)
       64 - 73: தோட்டியின்..........ஒய்யென
 
(பொழிப்புரை) அம்மொழிக்கண் தோட்டியின்கண் ணமைந்த வணக்கம் போன்று அமைந்த வணக்கத்தை அவ்வராகன் பெரிதும் விரும்பித் தனது கையிலிருந்த வளைந்த வில்லினை அவ் வுதயணன் கையிற்கொடுத்து அவனைக் கைகூப்பி வணங்கியவனாய் அவன்பணித்தவாறே விரைந்த செலவினையுடைய அப்பெரிய பிடியானையின் கான் மருங்கே சென்று அதன்மேல் ஏறுதல் விரும்பிய மாத்திரையின் ஆற்றன்மிக்க உதயணன் இளைமை யுடைய அப்பிடியினைத் தூண்டிக்கடுங்காற்றுப்போல விரைந்து செலுத்துதலானே அவ்வியானையின் வேகத்தாலே கால்தப்பி மண்ணில் வீழந்து அஞ்சி அதன்கண் ஏறமாட்டாதவனாக உதயண மன்னனோ அழகிய பெரிய காவலமைந்த உஞ்சை நகரத்தையும் நோக்கானாய், பிரச்சோதன மன்னனிருக்கு மிடத்தை அணுகுதலும் அணுகானாய் அந்நகரத்தைப் பின்னிட்டு மிகவிரைந்து ஓவியப் புலவரும் உருவினை எழுதுதற்கு அஞ்சாநிற்கும் பேரெழில் படைத்த வாசவதத்தையைக் கையாற்றழுவிக்கொண்டு தன்னூரிருக்குந் திசை நோக்கிச் செல்லா நின்றனன் என்க.
 
(விளக்கம்) தோட்டியின் வணக்கம் யானையைத் துன்புறுத்தற பொருட்டாமாறு போல உதயணனுடைய மொழியிற் காணப்பட்ட வணக்கமும் தீமையே குறித்தலின் ''தோட்டியின் வணக்கம்'' என்றார். தோட்டியின் வணக்கம் போன்ற வணக்கம் என்க.

"சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந்
தீங்கு குறித்தமை யான்"

எனவரும் திருக்குறளையும் (827) ஈண்டு நினைக. ஏற்றம் - ஏறுதலை, எடுப்பி - தூண்டி. மன்னன் - உதயணன். வெருளி - அஞ்சி, ஓவியர் தமக்கு எழுதவொண்ணாமையான் உட்குவர் என்றவாறு. உட்குதல் - அஞ்சுதல். உருவி - உருவமுடையவள்; வாசவதத்தை. ஒய்யென - விரைவுக் குறிப்பு.