உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
45. படைதலைக் கொண்டது
 
         
           காவ லாளர் கலக்க மெய்தி
     75    மண்ணக மழித்து மலைத்துச்சிறை கொண்ட
           நண்ணா மன்ன னாட்ட மோராம்
           பண்ணமை பிடிமிசைப் பையர வல்குலை
           ஏற்றல் வேண்டுமென் றிரந்தேற் றினமாற்
           கூற்ற வாணையெங் கொற்றவன் றலைத்தாள்
     80    என்சொலிச் சேறுமென் றெண்ணுபு நாணினர்
 
             (பிரச்சோதனன் மறவர் செயல்)
             74 - 80: காவலாளர்..........நாணினர்
 
(பொழிப்புரை) உதயண மன்னனுடைய செயல்கண்ட காவலாளர் பெரிதும் மனக்கலக்க மடைந்து தன் பகைவர் நாட்டை அழித்து அப்பகைமன்னரோடே போர் செய்து அவரை யெல்லாம் சிறைபிடித்த நம் பகை மன்னனாகிய உதயணனுடைய கருத்தினை ஆராய்ந்து தெளியாமல் ஒப்பனை செய்யப்பட்ட பிடியானையின்மேல் பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய நம் இறைமகளை "நின்னோடு பிடிமிசை ஏற்றிக்கோடல் வேண்டும்" என்று யாமே அவனைப் பெரிதும் வேண்டி ஏற்றினேம். அந்தோ! கூற்றுவன் கட்டளை போன்ற கட்டளையையுடையவனாகிய எம் மன்னவன் திருமுன்னர் என்ன தான் கூறிக்கொண்டு செல்லமாட்டுவேம்! என்று எண்ணிப் பெரிதும் நாண மெய்தியவராய் என்க.
 
(விளக்கம்) "மண்ணக மழித்து மலைத்துச் சிறைகொண்ட நண்ணா மன்னன்" என்றது உதயணனுடைய பழைய வெற்றியைக் குறித்தோதிய படியாம். பையரவல்குல் - வாசவதத்தை. தலைத்தாள் - திருமுன். எண்ணுபு - எண்ணி.