உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
45. படைதலைக் கொண்டது
 
         
           வெஞ்செலற் பகழியும் வில்லுந் தழீஇத்
           தஞ்சினம் பெருகத் தாக்குநர்ப் பெறாஅர்
           பொங்குபுகழ் வேந்தன் வென்றி யேத்தி
           விண்ணக மேறி னல்லது விரிநீர்
     85    மண்ணக வரைப்பினெம் மண்ணலைப் பிழைத்தோர்க்
           கின்னுயிர்க் கேம மாகுத லரிதெனப்
           பின்னிலை முனியார் பிடிவழிப் படரக
 
              (இதுவுமது)
       81 - 87: வெஞ்செலல்..........படர
 
(பொழிப்புரை) வெவ்விய செலவினையுடைய அம்புகளையும் விற்படைகளையும் பிடித்துத் தங்கள் வெகுளி பெருகாநிற்பத் தமக்கெதிரே தம்மால் தாக்கப்படும் பகைவரையும் காணப் பெறாராய், வளர்கின்ற புகழையுடைய தம் மன்னவன் வெற்றியைப் பாராட்டிப் பரந்த கடல் சூழ்ந்த இவ்வுலகத்தே எம்மரசனுக்குத் தவறிழைத்தோர் யாவேரே யாயினும் அவர் இறந்து வானுலகம் புகுதலன்றி அவர் தம் இன்னுயிர்க்குப் பாதுகாவல் அமைவது அரிதேயாகும் கண்டீர்! என மறவுரை விளம்பி அவ்வுதயணனை விடாது பின்னே சென்று போர் புரிதலை வெறாஅராய் அப்பிடியானைசென்ற நெறி பற்றி விரையாநிற்ப என்க.
 
(விளக்கம்) தாக்குநர் - தாக்கற்குரிய பகைவர். வேந்தன். பிரச்சோதனன். அண்ணல் - பிரச்சோதனன்.
"யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்" (குறள் - 895)

என்பதுபற்றி "மண்ணக வரைப்பினெம் மண்ணலைப் பிழைத்தோர்க் கின்னுயிர்க்கு ஏமமாகுத லரிது" என்றார். ஏமம் - பாதுகாவல். பின்னே தொடரும் நிலைமையினை முனியார் என்க.