உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
45. படைதலைக் கொண்டது
 
         
           கரைவேட் டுலாஅங் கருங்கட லழுவத்
           திரைவேட் டுலாஅ மினச்சுற வினத்தின்
     90    வத்தவ நாட்டு வித்தக வீரரும்
           மலைக்கு மாந்தரைத் தலைக்கொண் டோடி
           ஐந்தலை நாகத் தழலுறு கண்ணினர்
           பைந்தலை துமித்துச் செங்குடர் சிதறிப்
           பிடித்த வாளர் மடித்த வாயர்
     95    திருவமர் மூதூர்த் தெருவுங் கோணமும்
           ஒருவழி யொழியா துயிர்நடுக் குறீஇத்
           திரிதர்வர் மாதோ திருநக ரகத்தென்
 
            (உதயணனுடைய மறவர் செயல்)
              88 - 97: கரை..........நகரகத்தென்
 
(பொழிப்புரை) கரையின்கண் ஏறிப்படர்தலை விரும்பி அலையுலாவுகின்ற கரிய கடற்பரப்பின்கண்ணே தமக்கு வேண்டிய இரையாகிய மீன்களை விரும்பித் தேடித்திரிகின்ற சுற்றமாகிய சுறாமீன் கூட்டம் போன்று உதயண மன்னனுடைய வத்தவநாட்டுப் போர்த் திறமிக்க மறவர் தாமும், தம்மாற் கொல்லப்படவேண்டிய உஞ்சை நகரத்து மறவரிருக்குமிடந் தேடி ஓடிச்சென்று ஐந்தலைப் பாம்பின் கண் போன்று சினத்தீ மிகாநின்ற கண்களையுடையராய், அப்பகை மறவர் தம் பசிய தலைகளைத் துணித்தும், சிவந்த குடர்களைச் சிதறுவித்தும், வாள் பிடித்தவராய் மடித்த உதடுகளை யுடையராய்ச், செல்வம் வீற்றிருக்கும் பழைய ஊர் ஆகிய உஞ்சை நகரத்தினது தெருக்களினும் மூலைமுடுக்கர்களினும் யாண்டும், உயிருடையோரை யெல்லாம் அஞ்சி நடுங்குவித்தும், அவ்வழகிய நகரத்தூடே சுற்றித்திரியாநிற்பாராயினர் என்க.
 
(விளக்கம்) அழுவம் - பரப்பு. சுற - சுறாமீன். துமித்து - துணித்து, கோணம் - மூலை. திரிதர்வர் - திரிதருவர். மாதும் ஓவும் அசைகள்.

        45. படைதலைக்கொண்டது முற்றிற்று.
     -----------------------------------------------------