உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
46. உழைச்சன விலாவணை |
|
20 ஓங்குமடற் பெண்ணைத்
தீங்குலைத் தொடுத்த
விளைவுறு தீங்கனி வீழ்ச்சி
யேய்ப்பத்
தளையவிழ் தாமமொடு தலைபல
புரளவும் வேகப்
புள்ளின் வெவ்விசைக்
குலந்த நாகப்
பிறழ்ச்சியிற் றோண்முத றுணியவும் 25
அஞ்செஞ் சாந்த மெழுதிய
வகலம்
ஒண்செங் குருதிப் பைந்தளி
பரப்பவும்
குசைத்தொழிற் கூத்தன் விசைத்துநனி
விட்ட பொங்குபொறித்
தாரையிற் றங்கல்செல்
லாது குருதிச்
செம்புன றவிரா தெக்கவும்
|
|
(இதுவுமது)
20 - 29: ஓங்கு............எக்கவும்
|
|
(பொழிப்புரை) உயர்ந்த
மடலையுடைய பனையினது இனிய குலையின்கண் தொடர்பு பட்டமைந்த நன்கு
முதிர்ந்த இனிய கனிகள் வீழ்தல் போன்று மலர்ந்த மாலையோடு அப்பகைவர்
தலைகள் பலவும் தரையில் வீழ்ந்து புரளா நிற்பவும், விரை வுடைய
கருடப் பறவையின் வெவ்விய வேகத்தின் ஆரவாரங்கேட்ட பாம்புகள் அஞ்சிப்
புரளுதல் போன்று அவர்தந் தோள்கள் அறுந்து வீழ்ந்து புரளாநிற்கவும்,
அழகிய சிவந்த சந்தனத்தாலே கோல மெழுதப்பட்ட அவர்தம் மார்புகள்
ஒளியுடைய சிவந்த குருதி யாகிய பசிய துளிகளை நிலத்திலே
பரப்பவும் (குசைத்தொழிலை யுடைய?) கூத்தன் மிகவும் வேகமுண்டாக விட்ட
பொங்கா நின்ற நீர்வீசும் எந்திரத்தினின்று பாயும் சாதிலிங்க
நீர்போன்று இடையறவின்றி யாண்டும் குருதியாகிய செந்நீர் ஒழியாமல் பாயா
நிற்பவும் என்க.
|
|
(விளக்கம்) பெண்ணை -
பனை. தொடுக்கப்பட்டாற் போன்றமைந்த கனி என்க. வேகப்புள் - கருடன்.
தளி - துளி. குசைத்தொழிற்கூத்தன் என்பதற்குப் பொருள் நன்கு
புலப்படவில்லை. குமைத்தொழிற் கூத்தன் என்றும் பாடவேறுபாடுளது. பொறி -
நீர்வீசும் துருத்தி.
|