உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
         
     30    மிகைசெலற் கெழுந்த வேக வெவ்வழல்
           அகவயிற் சுடுதலி னவிந்த வாற்றலர்
           நிலத்தொடு நேரா நெஞ்சினர் போலப்
           புலக்கமழ் புண்ணர் விண்ணிடை நோக்கிக்
           கொலைப்பெருங் கூர்வாள் கோடுற வழுத்தலிற்
     35    பொறிப்படு வேங்கையிற் குறிப்பிலர் குரங்கவும்
 
                   (இதுவுமது)
             30 - 35: மிகை...........குரங்கவும்
 
(பொழிப்புரை) உதயணகுமரனுடைய மிகையான போக்கினைக் குறித்துத் தம் நெஞ்சத்தே எழுந்த சினமாகிய வெவ்விய நெருப்புத் தம்முள்ளத்தையே சுட்டெரித்தலானே தம் ஆற்றல் தீர்ந்தவராய் வத்தவர் கொலைத் தொழில் வல்ல தமது பெரிய கூரிய வாள்களை மார்பின்கண்ணே அவற்றின் பிடிபொருந்தும்படி செருகுதலானே, புலானாறும் விழுப்புண்ணையுடையராய் நிலமகளோடு பொருந்த உடன்படாத நெஞ்சுடையராய் வானத்தை அணந்து நோக்கி இயந்திரத்தின் அகப்பட்டுக் கொண்ட வேங்கை போன்று குறிப்பொன்றுமிலராய் மயங்கி நிலத்தின்கண் தாழாநிற்பவும் என்க.
 
(விளக்கம்) உதயணனுடைய மிகையான செலற்கு என்க. வேகம் - சினம். ஆற்றல் அவிந்தவர் என்க. கோடு - கொம்பாலியன்ற கைப்பிடி. பொறி - இயந்திரம். குரங்க - தாழாநிற்ப என்க.