உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
         
     45    மடத்தகை மகளிர் மருங்குல் கடிந்த
           முலைப்பூ ணழுத்திய மொய்சாந் தகலம்
           வாண்முக மழுத்தலின் வயவுநடை சுருங்கிச்
           செந்நிறக் குருதியிற் பைந்நிணங் கெழீஇச்
           செயிர்த்த நோக்கினர் செங்க ணாடவர்
     50    வியர்த்த நுதலினர் வீழ்ந்தன ரவியவும்
 
                    (இதுவுமது)
          45 - 50: மடத்தகை...........அவியவும்
 
(பொழிப்புரை) வேறுசில சிவந்த கண்ணையுடைய மறவர் மடமும் பெண் தன்மையும் மிக்க தங்காதன் மகளிருடைய இடையை மெலிவிக்கும் முலையினது அணிகலம் அழுத்தப்பட்ட நிரம்பிய சந்தனத்தையுடைய தமது மார்பின்கண், வத்தவ மறவரின் வாள் நுனை குத்துதலானே தமது வலிய மறநடை தளர்ந்து சிவந்த நிறமுடைய குருதியோடு பசிய தம் நிணமும் பொருந்தாநிற்பச், சினந்த நோக்கினையுடையராயும் வியர்த்த நுதலினையுடையராயும் போர்க்களத்தே வீழ்ந்து மடியா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) மகளிர் முலை, மருங்குல் கடிந்த முலை எனத் தனித்தனி கூட்டுக. வயவுநடை - வன்மையுடைய நடை.