உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
         
     55    தலையுந் தடக்கையுந் தாளு முடம்பும்
           கொலையமை வில்லுங் கூர்வாய்ச் சுரிகையும்
           வேலு மீட்டியுங் கோலுங் குந்தமும்
           சேடக வட்டமுஞ் செந்நூற் பாரமும்
           தண்டும் வாளுந் தளையிடு பாசமும்
     60    பொங்குமயிர்க் கிடுகும் புளகத் தண்டையும்
           அரக்குவினைப் பலகையு நிரைத்தவெண் குடையும்
           கூந்தற் பிச்சமுங் கோணா வட்டமும்
           வாங்குகைத் தறுகண் வாரணப் பிளவும்
           பரவைச் செந்திரை விரவுபு முடுகி
     65    அன்ன பிறவு முன்மு னுருட்டிக்
           கைந்நவி லாளர் காடெறிந் துழுத
           செந்நில மருங்கிற் செஞ்சால் சிதைய
           மரஞ்சுமந் திழிதருங் கடும்புனல் கடுப்பக்
           குருதிச் செம்புனல் போர்க்களம் புதைப்ப
 
                    (இதுவுமது)
           55 - 69: தலையும்............புதைப்ப
 
(பொழிப்புரை) அப்போரின்கண் பொழிந்த குருதியாகிய செம்புனல் உஞ்சை மறவரின் தலைகளையும், பெரியகைகளையும், கால்களையும், உடம்புகளையும் அவர் தம் கொலைத் தொழிற்குப் பொருந்திய விற் படைகளையும், கூரிய வாயையுடைய உடைவாள்களையும், வேற் படைகளையும், ஈட்டிகளையும், அம்புகளையும், குந்தங்களையும், கேடகமாகிய வட்டமான படையையும், செந்நூலானாய பாரங்களையும், தண்டுகளையும், வாட்படைகளையும், கட்டுதற்கியன்ற கயிறுகளையும், மிக்க மயிர் போர்த்த கிடுகுகளையும்; கண்ணாடி தைத்த கேடகங்களையும், சாதிலிங்கம் வழித்த கிடுகுப் பலகைகளையும், நிரல் பட்ட வெண்குடைகளையும், பீலியாலியன்ற பிச்சங்களையும், கோணா வட்டங்களையும், வளைந்த கையையும், தறுகண்மையையுமுடைய யானைகளின் உடற் பிளவுகளையும், கடலின்கண் அலைபோன்று எறியும் தனது சிவந்த அலைகளோடு கலந்து விரைந்து முற்கூறப் பட்டவைபோன்ற பிற பொருள்களையும் முன்னே முன்னே உருட்டிக்கொண்டு, கைத்தொழிலாளர் காடு கெடுத்து நாடாக்கி உழுத செந்நிலப் பரப்பின்கண்ணே அவருழுத சுவடு சிதையும்படி காட்டு மரங்களைச் சுமந்துகொண்டு வாரா நின்ற காட்டு வெள்ளமாகிய கடிய செலவினையுடைய நீர்போன்று வந்து அப்போர்க் களத்தைப் புதையா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) சுரிகை - உடைவாள். குந்தம் - சிறுசவளம். பாரம் - கிடுகு, கவசமுமாம். பகைவரைத் தளையினும் பாசம் என்க. புளகம் - கண்ணாடி. கோணாவட்டம் - ஒருவகை விருது. வாரணம் - யானை. கைந்நவிலாளர் - தொழிலாளர். குருதிக்குவமையாக செந்நில மருங்கிற் கடும்புனல் என்றார்.