உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            உயிரொன் றாகிய செயிர்தீர் காதற்
           றுணைநலத் தோழன் றுயர மறுத்தற்
           கிணைமலர்த் தடங்க ணிமையகத் தொடுங்கிய
     80    காட்சியிற் கனையும் வேட்கைய னாகி
           விம்முறு விழுநகர் வீதியிற் கொண்ட
           வெம்முறு படிவ நீக்கி யூகி
           பிணம்படு பெருங்காட்டுப் பேயு முட்கும்
           அணங்கருந் தானத் தஞ்சுதக விரீஇத்
     85    தாழி படுத்துத் தமரையுந் தெளியான்
           பூழி படுத்த சாதனை யமைவிற்
           கற்படை போழினுங் கதுவாய் போகா
           தெற்புடம் பறுக்கு மியற்கைத் தாகிக்
           கொற்புனைந் தியற்றிய கொலையமை கூர்வாள்
     90    வாய்வயிற் றெய்வம் வணங்குபு கொண்டு
 
                   (யூகியின் செயல்)
               77 - 90: உயிர்...........கொண்டு
 
(பொழிப்புரை) யூகி தன் உயிர் அவன் உயிர் என இரண்டாகாமல் ஒன்றுபட்ட தூய அன்பினையுடைய துணையாகிய நலமுடைய நண்பனாகிய உதயண குமரனுக்கு எய்திய சிறைத்துன்பத்தை அகற்றுதற்பொருட்டு அவனுருவத்தை எப்பொழுதும் மறவாமே தனது இரண்டாகிய மலர்போன்ற பெரிய விழிகளில் இமையகத்தே வைத்துக் கண்டிருக்கும் காட்சியினாலே மேன்மேலும் அவன்பாற் பெருகாநின்ற வேட்கையை உடையனாகி மிகாநின்ற சிறப்பினையுடைய உஞ்சை நகர வீதிகளிலே திரிதற்கு மேற்கொண்ட கண்டோர் விருப்ப முறுதற்குக் காரணமான மாறு வேடத்தைக் களைந்துவிட்டுப் பிணங்கள் கிடக்கின்ற பெரிய நன்காட்டில் வாழும் பேயும் அஞ்சுதற்குக் காரணமான துயர் தரும் கிட்டுதற்கரிய வோரிடத்தே தன் தமர்களையும் நம்பாமல் கண்டோர் அஞ்சும்படி வைத்துத் தாழியைக் கவிழ்த்து அந்நன் காட்டுச் சாம்பலாலே மறைக்கப்பட்ட செயலமை தியினையுடையதும், படையாகிய கல்லைப் பிளந்தாலும் வடுப்படாமல் என்பாலியன்ற உடலினை அறுக்கும் இயல்பினையுடையதும் ஆகிய கொற்றொழிலாலே அழகுற இயற்றப்பட்ட தனது கூரிய வாளினை அதன் வாயின்கண் உறையும் மறத்தெய்வமாகிய கொற்றவையை வாழ்த்தி வணங்கிக் கையிலெடுத்துக்கொண்டு என்க.
 
(விளக்கம்) யூகி உதயணன் உருவத்தை மறவாமே தன் கண்ணிமைக்குட் பொதிந்து வைத்து நெஞ்சாலே கண்டு கண்டுவக்கும் காட்சியையுடைய வனாயிருந்தான் என்பது கருத்து. விம்முறு - மிகாநின்ற. வெம்முறு - விருப்பமுறுதற்குக் காரணமான. பெருங்காடு என்றது - சுடுகாட்டினை. யூகி தன் வாட்படையைத் தன் தமரையும் நம்பாமல் அஞ்சத்தகுந்த சுடுகாட்டின்கண் மக்கள் கிட்டுதற்கு அஞ்சத்தகுந்த வோரிடத்தே மறைத்து வைத்துத் தாழியைக் கவிழ்த்துச் சாம்பலான் மூடிவைத்திருந்தான் என்பதும், அதனை இப்பொழுது கைக்கொண்டான் என்பதுமாம். கதுவாய் போதல் - வாளின்வாய் நுறுங்கி வடுப்பட்டுப்போதல். இங்ஙனமாதலை மூளி வாய் என்பர் இக்காலத்தார். வாளின்வாய் வயிற்றெய்வம் என்க; அஃதாவது கொற்றவை.