உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            தீவயி றார்த்திய திறலோன் போலநின்
           காய்வுறு கடும்பசி களைகுவெ னின்றெனைக்
           காத்த லோம்பென வாற்றுளி கூறிப்
           பத்தி குயின்ற பல்வினைக் கம்மத்துச்
     95    சித்திரச் சேடகஞ் செறியப் பற்றி
           உற்றோ னுற்ற வுறுகண் டீர்க்கென
           கற்றோய் கலிங்கங் கட்டிய கச்சையன்
           ஊழி யிறுதி யுட்குவரத் தோன்றி
           வாழுயிர் பருகும் வன்கட் செய்தொழிற்
     100    கூற்றம் போல வேற்றவர் முருக்கிக்
 
                    (இதுவுமது)
            91 - 100: தீவயிறு...........முருக்கி
 
(பொழிப்புரை) அத்தெய்வ வாளினை நோக்கி 'வாட்படையே! காண்டவ வனத்தை இரையாக வழங்கித் தீக்கடவுளின் வயிற்றுப் பசியைத் தீர்த்த அருச்சுனன் போன்று யான் இன்று நின் வயிறு காய்தற்குக் காரணமான கொடிய பசிக்கு இரை வழங்கித் தீர்க்குவென் காண்! இற்றை நாள் என்னைப் பாதுகாத்தருள்வாயாக!' என்று முறைப்படி வணங்கி வேண்டி வரிசை வரிசையாகச் சித்திரம் பொறிக்கப்பட்ட பல்வேறு தொழிற்றிற மமைந்த தனது சித்திரக் கேடகத்தையும் உறுதியாகக் கையிற் பற்றிக்கொண்டு தன் நண்பன் உற்ற துயரத்தைத் தீர்த்தற்குத் தான் சூள் செய்துகொண்டமைக்கு அறிகுறியாகக் காவிக்கல்லைக் கரைத்துத் தோய்த்த ஆடையினையும் கச்சையினையும் உடையனாய் ஊழி முடிவிலே எவ்வுயிர்க்கும் அச்சம் வருமாறு தோன்றி உலகில் வாழாநின்ற உயிர்களைப் பருகாநின்ற வன்கண்மையாற் செய்யும் கொடுஞ் செயலையுடைய கூற்றுவன் போலப் போர்க்களத்தே ஞெரேலெனத் தோன்றித் தன்னை எதிர்த்த பகை மறவர்களைக் கொண்று நூழிலாட்டி என்க.
 
(விளக்கம்) தீ வயிறார்த்திய திறலோன் - அருச்சுனன். 'காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப் பூவிரி கச்சைப் புகழோன்' என்றார் சிறுபாணினும் (238 -- 9). சேடகம் - கேடகம். உற்றோன் - நண்பன், உதயணன். கல் - காவிக்கல் ஒன்றனைச் செய்தே தீர்வேன் என்று சூளுறவு கொள்வோர் அதற்கறிகுறியாகக் கல்லாடை உடுத்தல் மரபு. உட்கு - அச்சம்.