உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            நும்பொருட் டாக நெடுந்தகை யெய்திய
           வெம்பெருந் துயரம் விடுத்தனை யாகிக்
           காட்டகத் தசையாது கடுகுபு போகி
           நாட்டகம் புகுக நண்பிடை யிட்ட
     110    இரும்பிடி நினக்கிது பெருங்கடன் மற்றெனப்
           பிடியோம் படுத்துப் பெருமை யெய்திக்
           குடியோம் பியற்கையெங் கோமக னெழுகென
           வரத்தொடு புணர்ந்த வாரணக் காவற்
           றிறத்தொடு கொடுத்துச் செய்பொருள் கூறிப்
     115    புறக்கொடுத் தொழியும் போழ்திற் றிறப்பட
 
                   (இதுவுமது)
             106 - 115: நும்............திறப்பட
 
(பொழிப்புரை) பின்னர் உதயணன் ஏறியிருக்கின்ற பத்திராபதியை நோக்கி 'நட்புரிமை கொண்ட பெரிய பிடி நங்கையே! நுங்களினத் தன்புடைமை காரணமாக எம் மன்னவன் எய்திய வெவ்விய பெரிய துயரத்தைக் களைந்துய்யக் கொள்வாயாய், எதிரே நீ செல்லும் காட்டினூடே தங்காமல் விரைந்து சென்று எங்கள் நாட்டினூடே புகுவாயாக! இது நினக்குப் பெரியதொரு கடமைகாண்,' என்று அப்பிடியின்பால் உதயணனை அடைக்கலங் கொடுத்துப் பின்னர் உதயணனை நோக்கி 'மன்னர்க்கியன்ற பெருமையெல்லாம் எய்திக் குடிமக்களைப் பாதுகாக்குந் தொழிலை இயல்பாகவுடைய எம்மிறைவன் மகனே! இனி நீ நம்மூர்க்கு இனிதே சென்றருள்க' என்று விடை கொடுத்து வரத்தினாலே அவன்பாற் சேர்ந்திருக்கும் அப்பிடியானையைப் பாதுகாத்தற் பொருட்டு அதனையும் அவன்பாற் றிறம்பட ஓம்படுத்து நகரத்தே சென்று செய்தற்குரிய ஆள்வினைகளையும் திறம்பட அறிவித்து அவ்வுதயணன்பானின்று திரும்பி ஒருபாற் செல்லும் காலத்தே என்க.
 
(விளக்கம்) தெய்வயானையின் பொருட்டே உதயணன் சிறைபுகும்படி நேர்ந்தமையால் நும்பொருட்டு நெடுந்தகை எய்திய துயரம் என்றான். அசையாது - தங்காமல். கடுகுபு - விரைந்து. இரும்பிடி: விளி. கோமகன்: முன்னிலைப் புறமொழி.