உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            ஒருநாட்டுப் பிறந்த வார்வ மன்றியும்
           கருமக் கிடக்கையுங் கலங்காச் சூழ்ச்சியும்
           மறைபுறப் படாமையு மறையுண் ணாமையும்
           வாசவ தத்தைக்கு வலித்துணை யாய
     120    தாய்மையுந் தவமும் வாய்மையு நோக்கி
           விடுதற் கருமை முடியக் கூறி
           வடிவும் வண்ணமும் படிவமும் பிறவும்
           அருந்தவ மகளைத் திருந்துமொழித் தோழன்
           உணர வெழுதிய வோலையும் வாங்கிப்
     125    புணர வவள்வயிற் போக கொண்டென
           ஊகந்த ராயற் காக நீட்டித்
 
                (உதயணன் செயல்)
                 116 - 126: ஒரு...........நீட்டி
 
(பொழிப்புரை) உதயண குமரன் அரிய தவமேற்கொண்ட சாங்கியத்தாயைத் திருந்திய மொழியையுடைய தன் தோழனாகிய யூகி நன்கு அறிந்துகொள்ளும் பொருட்டு முற்படவே தான், அவளும் தானும் ஒரு நாட்டிலேயே பிறந்தமையால் தனக்கு அவள்பாலுண்டான ஆர்வத்தின் றன்மையையும், அவளது செயற்றிறனின் ஒழுங்கு முறையையும் கலக்கமில்லாத அவளுடைய ஆராய்ச்சித் திறனையும் மறைச் செய்திகள் அவள்பானின்றும் எக்காரணத்தானும் வெளிப்படாமைக்குக் காரணமான அவளுடைய நெஞ்சத் திட்பத்தினையும் பகைவராற் கீழறுக்கப்படாத அவளுடைய செறிவுடைமையையும் தன் காதலியாகிய வாசவதத்தைக்கு அவள் வலிமை மிக்க துணையாக அமைந்த அவளுடைய தாய்மைப் பண்பின் சிறப்பினையும் தவம் தாங்குந் திண்மையையும் வாய்மை யுடைமையையும் இவை காரணமாக அவளைத் தான் கைவிடற்கியலாமையையும் நிரம்ப எழுதி மேலும் அவள் வடிவமும் நிறமும் புனைவும் பிறவுமாகிய அடையாளங்களையும் விரித்து வரைந்து வைத்திருந்த ஓலையையும் அவ்வியூகி ஏற்றுக்கொண்டு அச்சாங்கியத் தாயின்பாற் சென்று அவளைக் காணும்பொருட்டு அதனை அவ்வியூகியின்பாற் கொடுக்கும்படி தன் மறவன் ஒருவன்பாற் கொடுத்து என்க.
 
(விளக்கம்) யூகி தன்பானின்றும் செல்லுங் காலத்தே உதயணன் சாங்கியத்தாயை அவனுக்கு அறிவித்தற் பொருட்டுத் தான் எழுதி வைத்திருந்த ஓலையை ஒருவன்பாற் கொடுத்து யூகியின்பாற் கொடுக்கும்படி செய்தான் என்க. ஒரு நாட்டிற் பிறந்தமையால் உண்டான ஆர்வம் என்க. மறை - மறைச்செய்தி. அறையுண்ணாமை - பகைவராற் கீழறுக்கப்படாமை. படிவம் - அவள் புனைந்திருக்குந் தவக் கோலத்தின்றன்மை. அருந்தவமகள் - சாங்கியத்தாய். ஊகந்தராயன் - யூகி. யூகியின்பாற் சேர்ப்பிக்கும்படி ஒருவன்பால் நீட்டி என்க.