உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            முன்னிய பொழுதின் முன்னாங் கூறிய
     135    வணங்குசிலை கொடுத்த வலிகெழு வராகன்
           இரும்பிடி கடாவல னிவனென வெண்ணி
           அரும்படை யாள ராருயி ரோம்பி
           நயந்துகை விடாஅன் பின்செல் வோனை
 
                   (வராகன் செயல்)
            134 - 138: முன்னாம்..........செல்வோனை
 
(பொழிப்புரை) முன்னர் யாம் கூறிய, தன் கையிலிருந்த வளைந்த வில்லை உதயணன்பாற் கொடுத்த ஆற்றல் பொருந்திய வராகன் என்னும் அக்காவலர் தலைவன் இவ்வுதயண குமரன் பெரிய பிடியானையைத் தொலைவிற் செலுத்தான் (நிறுத்துவன்) என்னும் நம்பிக்கை யுடையனாய் அரிய படை யேந்திய வத்தவ மறவர்பானின்றும் தன் ஆருயிரைப் பாதுகாத்துக்கொண்டு வாசவதத்தையைப் பின்னும் பாதுகாத்தலையே நயந்து கை விடாதவனாய்ப் பிடியானையைப் பின் தொடர்ந்து வருகின்றவனை என்க.
 
(விளக்கம்) முன்னாங்கூறிய வராகன். இது நூலாசிரியர் கூற்று. வலிகெழுவராகன் என்றது இகழ்ச்சி. இவன் : உதயணன். அரும் படையாளரினின்றும் தன் உயிரையோம்பி என்க. படையாளர் - வத்தவ மறவர்.