உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
46. உழைச்சன விலாவணை |
|
எள்ளியது
தீர வுள்ளியது
முடித்த உலவாக்
கேள்வி யுதயண குமரனைத்
தொகுவிரல் கூப்பித் தொழுவன
ளாகித்
தேம்பொதி செவ்வாய்க் காஞ்சனை யுரைக்கும்
175 பைந்தளிர் பொதுளிய பனிமலர்க்
காவிற்
செந்தளிர்ப் பிண்டிச் சினைதொறுந்
தொடுத்த
பின்னுறு பொன்ஞாண் பெருந்தொடர்
கோத்த பண்ணுறு
பல்வினைப் பவழத்
திண்மணை
ஊக்கமை யூசல் வேட்கையின் விரும்பினும்
180 திருநலத் தோழியர் சிறுபுறங்
கவைஇப்
பரவை யல்குற் பல்காசு
புரளக் குரவை
யாயங் கூடித் தூங்கினும்
தன்வரைத் தல்லா விம்முறு
விழுமமொடு
நோய்கூர்ந் தழியுமெங் கோமக ணடுங்க
185 எறிவளி புரையு மிரும்பிடி
கடைஇப்
பின்வழிப் படருமெம் பெரும்படை
பேணாய்
என்வலித் தனையோ விறைவ நீயென
|
|
(காஞ்சனை உதயணனை
வினவுதல்) 171
- 187: எள்ளியது..........நீயென
|
|
(பொழிப்புரை) தன்னைப்
பிறர் இகழ்தற்குக் காரணமான இளிவரல் தீரும்படி தான் கருதிய செயலினைச்
செய்துமுடித்த கெடாத நூற் கேள்வியினையுடைய உதயணகுமரனைத் தேன்பொதி
மலரன்ன சிவந்த வாயினையுடைய காஞ்னமாலை தனது தொகுதியான விரல்களைக்
கூப்பித் தொழுது கூறுபவள் 'இறைவனே! பசிய தளிர்நிறைந்த குளிர்ந்த
மலர்ப் பொழிலின்கண் சிவந்த தளிரையுடைய அசோக மரத்தினது
கிளைதோறும் பிணைத்த பின்னுதலுற்ற பொற்கயிறாகிய பெரிய சங்கிலியைக்
கோத்த ஒப்பனை செய்யப்பட்ட பல்வேறு வினைத்திறனமைந்த பவழத்தாலியன்ற
திண்ணிய மணையமைந்த அசைத்தற்கியன்ற ஊசலின்கண் ஆடவேண்டும் என்னும்
அவாவாலே இவள் விரும்பினாலும், அழகின் நன்மையமைந்த தோழிமார் இவளது
சிறிய முதுகினைக் கையாலணைத்துக் கொண்டு பரப்புடைய அல்குலின்மேல் பலவாகிய
மணிக்கோவையாகிய மேகலை புரளாநிற்ப அத்தோழியர் கூடிக் குரவைக்
கூத்தாடினாலும், தன் வயமிழந்து விம்முதற்குக் காரணமான துன்பத்தோடு
அச்சத்துன்பம் மிகாநிற்றலாலே நெஞ்சழியும் இயல்புடைய எம்மிறை மகளாகிய
வாசவதத்தை அஞ்சி நடுங்கும்படி இயற்கையிலேயே வீசாநின்ற பெருங் காற்றுப்
போன்று விரைந்தோடும் இப்பெரிய பிடியானையை மேலுந்தூண்டி இப்பிடியின்
பின்னர் எம் பாதுகாப்பின் பொருட்டுத் தொடரா நின்ற எம்முடைய பெரிய
படைவரவினையும் தழுவாயாகின்றனை! நீ தான் இப்பொழுது யாது
கருதிச் செலுத்துகின்றனையோ? அறிகின்றிலேமே!' என்று வினவாநிற்ப
என்க.
|
|
(விளக்கம்) ஊசலாடத் தானே
விரும்பி ஏறினும் ஏறியபின் பெரிதும் அஞ்சாநிற்பள் என்றவாறு.
விழுமம் - துன்பம். கோமகள்: வாசவதத்தை. வளி - பெருங்காற்றென்பதுபட
நின்றது. பேணாயாகின்றனை என்க. இறைவ: விளி.
|