உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            நடுக்கம் வேண்டா நங்கையு நீயும்
           அடுத்த காவல னிவளொடு மமர்ந்து
     190    விடுத்தமை யுணரா வீரிய விளையர்
           தருக்கொடு வந்து செருச்செய றுணிந்தனர்
           பணிவகை யின்றிப் பண்டு மின்னதை
           அணியிழை மடவோய் துணிகுவெ னாயின்
           அரியவு முளவோ வஞ்ச லோம்பெனத்
 
                    (உதயணன் தேற்றல்)
                188 - 194: நடுக்கம்.........ஓம்பென
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன் ''காஞ்சனமாலாய்! வாசவதத்தையும் நீயும் அஞ்சி நடுங்குதல் வேண்டா. அண்மையிலிருக்கும் மன்னவன் இவளை என்னோடு சேர்த்தலை விரும்பி விடுத்ததனை அறியாமையால் மறமிக்க வீரர் செருக்கோடு வந்து என்னோடு போர் ஆற்றத் துணிந்து விட்டனர். மன்னவன் பணித்த முறையாலேயே யான் இவளைப் பிடியேற்றிச் செல்லாநின்றேன். அவன் பணியின்றியும் இவளை இவ்வாறு கொண்டுபோதலை யான் எண்ணியிருப்பேனாயின் மடப்பமுடைய தோழி கேள்! என்னாற் செய்யவியலாத செயல்களும் உளவாகுமே; நீயிர் அஞ்சுதலை ஒழிமின் என்று கூற என்க.
 
(விளக்கம்) நடுக்கம் - நடுங்குதல். நங்கை: வாசவதத்தை. காவலன்: பிரச்சோதனன். வீரியம் - மறப்பண்புடைய. இன்னதை என்றது இங்ஙனம் இவளைக் கைப்பற்றிப் போதலை என்றவாறு.