உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
         
     275    குழியுங் குவடும் வருநீ ரசும்பும்
            வள்ளியும் வகுந்துஞ் சுள்ளியுஞ் சூரலும்
            வழைசேர் வாழையுங் கழைசேர் கானமும்
            நாகமு நறையு மூகமு முழுவையும்
            கடமா னேறுங் கவரியுங் கரடியும்
     280    மடமான் பிணையு மஞ்ஞையு மகன்றிலும்
            விடமா நாகமும் வேக யானையும்
            கழனியும் பொய்கையும் பழனப் படப்பையும்
            தெரிமலர்க் காவு முருவின வாக
            அமைக்கப் பட்ட செயற்கருஞ் செல்வத்து
     285    மைதவழ் சென்னிக் கைசெய் குன்றொடு
 
                     (இதுவுமது)
             275 - 285: குழியும்..........குன்றொடு
 
(பொழிப்புரை) 'குழிகளும், குவடுகளும், வழிந்தோடும் நீர்க்கசிவுகளும், வள்ளிக்கொடியும், வகுந்தமரமும், ஆச்சாமரமும், பிரம்பும், சுரபுன்னை மரங்களும், அவற்றையடுத்த வாழைகளும், மூங்கில் சேர்ந்துள்ள காடும், நாகமரமும், நறை மரமும், கருங்குரங்கும், புலியும், கடமானும், அவற்றின் ஏறும், கவரிமாவும், கரடியும், மடப்பமுடைய மானும், பிணையும், மயிலும், மகன்றிற் பறவையும், நஞ்சுடைய பெரிய பாம்பும், சினமுடைய யானையும், கழனிகளும், பொய்கைகளும், பொதுநிலத்தின்கண் தோட்டமும், விளங்கா நின்ற மலர்ப்பூம் பொழிலும், ஆகிய இவைகளோடு அழகுடையனவாக அமைக்கப்பட்ட செய்தற்கரிய செல்வத்தையுடைய முகில் தவழாநின்ற உச்சியை யுடைய ஒப்பனை செய்யப்பட்ட செய்குன்றோடு' என்க.
 
(விளக்கம்) ஈண்டுக் கூறிய பொருள்கள் எல்லாம் சிற்பத்தாலியன்ற குறிஞ்சிப் பொருள்கள் என்க. குழி - குழிந்த இடங்கள். நீர் வழியசும்பு என்க. நீர்கசியுமிடம். வகுந்து - ஒருமரம். சுள்ளி - ஆச்சாமரம். சூரல் - பிரம்பு. வழை - சுரபுன்னை. கழை - மூங்கில். நாகம் - ஒருமரம். நறை - கொடியுமாம். ஊகம் - கருங்குரங்கு. உழுவை - புலி. கவரிமா என்க. மை - முகில். செய்குன்று - செயற்கை மலை.