உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
             நால்வகை நிலனும் பால்வகுத் தியற்றி
            அறவை யல்லது பிறபுகப் பெறாஅ
            வளமரந் துறுமிய விளமரக் காவினுட்
            கொண்ட கோலமொடு குரவை பிணைஇ
     290    வண்ட லாடுந் தண்டாக் காதல்
            எம்மையு முள்ளா திகந்தனை யோவென
            மம்மர் கொண்ட மனத்த ராகித்
            தோழிய ரெல்லாம் பூழியுட் புரளவும்
 
                     (இதுவுமது)
            286 - 293: நால்வகை..........புரளவும்
 
(பொழிப்புரை) ''குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நால்வகை நிலங்களையும், அவற்றின் கருப்பொருள்களோடு கூறபடத் தனித்தனியே செயற்கையாலே அமைத்து, அறப் பண்புடைய, நல்லுயிரினங்கள் அன்றிப் பிற தீய வுயிரினங்கள் உள்ளே புகுதாமல் பாதுகாக்கப்பட்ட வளமுடைய மரங்கள் செறிந்த இளமரப் பொழிலின்கண் ஒப்பனை செய்துகொண்ட கோலத்தோடு கைபிணைந்து குரவைக் கூத்தும், வண்டலாடலும், நின்னொடு ஆடாநின்ற அமையாத அன்புடைய எங்களையும் நினையாமற் சென்றனையோ?'' என்று வாசவதத்தையின் தோழியர் எல்லாம் மயக்கமுற்ற நெஞ்சையுடையராய்ப் புழுதியிலே வீழ்ந்து புரண்டழா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) நால்வகை நிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பன. அரண்மனைக்கு அங்கமாக இவைகள் செயற்கை வகையால் ஆங்கு இயற்றப்பட்டன என்க. சீவகசிந்தாமணி 148 - ஆம்செய்யுளும் அதனுரையும் காண்க. அறவை - அறத்தன்மையுடைய உயிர்கள். பிற - பாம்பு முதலியன. துறுமிய - செறிந்த. மம்மர் - மயக்கம். பூழி - புழுதி.