உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
             பொன்னணிப் பாவை போகிய புணர்ப்பின்று
     320    தன்னி னாகிய தன்மைத் தென்று
            தண்டார் வேந்தன் கொண்ட காலை
            விடுத்தற் கரிதென நடுக்க மெய்தி
            ஓங்கிய வொழுக்கி னுயர்ந்தோர்ப் பேணிச்
            சாங்கியந் தாங்கிய சால்பணி படிமை
     325    வருமதி நுனித்த பெருமூ தாட்டி
 
             (சாங்கியத்தாயின் செயல்)
        319 - 325: பொன்னணி..........பெருமூதாட்டி
 
(பொழிப்புரை) உயர்ந்த ஒழுக்கத்தையுடைய துறவோரை வழிபட்டுச் சாங்கிய சமயத்தை மேற்கொண்ட சான்றாண்மைக்கியன்ற அழகிய தவவேடத்தையும் நுணுகிய அரிய மதியினையும் உடைய பெரிய மூதாட்டியாகிய சாங்கியத்தாய், ''குளிர்ந்த மாலையையுடைய பிரச்சோதன மன்னன் தன் மகளாகிய பொன்னணிகலனுடைய கொல்லிப்பாவை போன்ற வாசவதத்தை இன்று உதயணனோடு போதற்குக் காரணமான சூழ்ச்சி என்னாலேயே தோன்றிய தன்மையது என்று தன்னெஞ்சத்தே கருதிவிடுவானாயின் அதனால் உண்டாகும் குற்றம்தான் தீர்த்துக் கோடற்கு இயலாத தொன்றாம்'' என்று எண்ணி அச்சத்தால் நடுக்கமெய்தி என்க.
 
(விளக்கம்) பாவை - வாசவதத்தை. புணர்ப்பு - சூழ்ச்சி. வேந்தன் - பிரச்சோதனன். விடுத்தல் - தீர்த்துக்கோடல். படிமை - தவவேடம் மூதாட்டி - சாங்கியத்தாய்.