உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
             இன்னோர் பிறரு மம்மருண் மயங்கிய
            உழைக்கல மகளிரு மிழைப்பிரிந் தரற்றவும்
     335    பேராறு மடுத்த பெருங்கடல் போல
            ஓசை யறியாப் பூசலும் புலம்பும்
            ஊரக மருங்கிற் கூரெரி கொளுவ
            எதிர்த்த மாந்த ரின்னுயி ரிறுதியும்
            கதிர்த்த முறுவற் கன்னியைத் தழீஇ
     340    வத்தவ னகறசியு மவ்வழிச் செலவும்
            வித்தக குமரர் வீழ்ச்சியும் பிறவும்
            ஒத்தவை யுணர்ந்து முற்றிறைக் குரையார்
            பொய்ப்பொரு ளாயினு மெய்ப்பொருட் கண்ணும்
            உய்வகை யில்லை வெய்யோன் மாட்டென்
     345    றறிந்தோ ரறிந்தோர் செறிந்தன ராகி
            வெய்துறு விழுமமொடு விம்மங் கூரச்
            செய்வதை யறியார் திரிவராற் பலரென்.
 
                (செயல் அறிந்தோர்)
           333 - 347: இன்னோர்..........பலரென்
 
(பொழிப்புரை) கொட்டந்தாங்கிய மகளிர்முதலாகச் செவிலியர் ஈறாகவுள்ள இவர்களும்; வாசவதத்தையின் பிரிவாற்றாமல் மயக்கத்தி னுள்ளே பொருந்திய உழைக்கல மகளிரும், ஏனையோரும், தாம் தாம் செய்யும் செயல் துறந்து இங்ஙனம் அழாநிற்பவும், இவ்வாற்றான் பெரியயாறுகள் சென்று புகாநின்ற பெரிய கடலிலே எழும் ஆரவாரம் போன்று எழுந்த இன்ன ஓசையென்று இனம் பிரித்துணரவொண்ணாத பேராரவாரத்தையும், அழுகையையும், நகரத்தின்கண் கள்ள மங்கையர் மிக்க தீயைக் கொளுவியதனாலே ஆங்கு வத்தவமறவரை எதிர்த்த உஞ்சை மறவர், இறந்து பட்டமையையும் ஒளிருகின்ற முறுவலையுடைய வாசவதத்தையைக் கைப்பற்றிக்கொண்டு உதயணகுமரன் தன்னூர்க்குச் சென்றமையையும் படைமறவர் அவனைப் பின் தொடர்ந்தமையையும்; திறமுடைய மறவர் பலர் மாண்டமையையும், இன்னோரன்ன பிற நிகழ்ச்சிகளையும் கண்கூடாக அங்கங்கே கண்டவர் இச்செவ்வியிலே பிரச்சோதனன்பாற் சென்று கூறப்படும் செய்தி பொய்யேயாயினும் மெய்யேயாயினும் கூறியவர் அவனாற் கொல்லப்படுவாரேயன்றி அவர் உய்யும் வழியில்லை என்னும் அச்சத்தாலே தம் மனத்திலேயே அடக்கிக் கொண்டவராய் அரசன்பாற் சென்று கூற அஞ்சுவாராய் உளம் வேதற்குக் காரணமான பெருந் துயரத்தோடு விம்முதலுற்றுச் செய்வது இன்ன தென்றறியாது திகைத்து அறிஞர் பலரும் சுழன்று திரிவாராயினர் என்க.
 
(விளக்கம்) இழைப்பு இரிந்து என்க: தொழில் தவிர்ந்தென்பது பொருள், ஓசையைப் பிரித்துணரவொண்ணாத பூசல் என்க. கன்னி - வாசவதத்தை ஒத்தவை பிறவும் என மாறுக. வெய்யோன் - அரசன். விம்மம் - விம்முதல். அறிஞர் பலரும் திரிவர் என்க.

46. உழைச்சன விலாவணை முற்றிற்று.