உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           செறியிலைப் பொற்குழை சிறப்பொடு தூக்கிய
           சிறுதுளைக் காதிற் செங்கட் செந்நோக்
     20    கருளொடு படாஅ வறிதெழு சினத்தன்
           ஆர் மார்ப னருமறைப் பள்ளியுள்
           உற்றது கூறுங் கொற்ற வாயிலன்
           கோலொடும் வாளொடுங் கூப்பிய கையன்
           முன்பணிந் திறைஞ்சிய தன்மை கண்டே
     25    செந்தா மரைக்கணிற் செவ்விதி னோக்கி
           வந்தது கூறென வணங்கி வாய்புதைத்
 
             (வாயிலோன் செயல்)
        18 - 26: செறியிலை..........கூறென
 
(பொழிப்புரை) திருவிழாவிற் கெனச் சிறப்பணியாகச் செறிந்த இலைவடிவமமைத்த பொன்னாலியன்ற குழை தூங்கவிடப்பட்ட சிறிய துளையையுடைய செவிகளையும், சிவந்த கண்களிடத்தே செவ்விய பார்வையினையும் அருளினைப் பொருந்தாது காரணமின்றியே எழா நின்ற சினத்தையுமுடைய முத்தாரமணிந்த மார்பையுடைய அப்பிரச்சோதன மன்னன் தனது அரிய மறை பேசும் பள்ளியின்கண்ணும், மறை பேசும் பொழுதே வந்து நிகழ்ந்தவற்றைக் கூறுதற்குரிய வெற்றியுடைய வாயிலைக் காக்குந் தொழிலாளன் பிரப்பங்கோலோடும் வாளோடும் கூப்பிய கையையுடையனாய் வந்து தன் முன்னே வணங்கிய தன்மையைக் கண்டு தனது செந்தாமரை போன்ற திருக் கண்களாலே அவனைக் கூர்ந்து நோக்கி "வாயிலோயே நீ கூற வந்த செய்தியைக் கூறுக!" என்று பணித்தருள என்க.
 
(விளக்கம்) சிறப்பு - திருவிழாவின் பொருட்டுச் சிறப்பாக என்க. ஆண்டு நிகழ்ந்த இன்னா நிகழ்ச்சிகள் காரணமாக மன்னவன் கண்கள் அருளொடு படாமல் வெந்நோக்குடையனவாக அவனும் வறிதெழுஞ் சினமுடையனாக இருந்தான் என்பது கருத்து. அருமறைப் பள்ளி - அரிய மறைச்செய்தி பேசுமிடமாகிய பள்ளி என்க.. அவனுடைய மெய்ப்பாட்டைக் கூர்ந்து நோக்கி என்பார் செவ்விதின் நோக்கி என்றார்.