உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
      35   அகன்மொழி தெரியு மருமறைப் பொழுதும்
           மகண்மொழி யல்லது மற்றைய கேளா
           இயற்கைய னாதலிற் பெயர்த்துப்பிறி துரையான்
           வருக மற்றவன் வல்விரைந் தென்றலின்
 
           (பிரச்சோதனன் செயல்)
        35 - 38: அகன்மொழி..........என்றலின்
 
(பொழிப்புரை) அதுகேட்ட மன்னவன் விரிந்த மொழிகளை ஆராய்ந்து தெளியாநின்ற அரிய மறைபேசுங் காலத்தேயும் வாசவதத்தையைப் பற்றிய செய்தியுள தெனின் அதனைக் கேட்டலன்றி ஏனைய எம்மொழியினையும் கேளாத பேரன்புடையனாகலின் அக்காவலன் கூற்றிற்கு மாறாக மற்றொன்றும் கூறானாய் "அங்ஙனமாயின் அவ்வராகன் மிகவிரைந்து வருவானாக!" என்று பணித்தருளுதலானே என்க.
 
(விளக்கம்) அகன்மொழி ; வினைத்தொகை. மறைபேசும் பொழுதும் என்க. அவன் - வராகன்.