உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           ஆணை வேந்த னருங்கல நிதியம்
     40    பேணாது பிழைத்த காவ லாளன்
           திருத்தகை மார்பற் குரைப்பதொன் றுள்ளான்
           நின்றன னிமைப்பிடைச் சென்றன னுணர்த்தக்
 
           (வாயில் காவலன் செயல்)
            39 - 42: ஆணை..........உணர்த்த்
 
(பொழிப்புரை) முன்னரே ஆணையையுடைய அப்பிரச்சோதன மன்னனது அருங்கலமாகிய பொருளைக் காவல் செய்வதன்கண் ஒரு தவறு புரிந்திருந்த அவ்வாயில் காவலன், அதற்குப் பரிகாரமாக மன்னனுக்கு ஒன்றனைக் கூறும் கடமையுடையோனாகலின் அதனைக் கூறுவதற்குச் சிறிதுபொழுது நின்றவன் அரசன் ஆர்வமிக்க அப்பணி கேட்டலும் அதனை விடுத்து இமைப் பொழுதிலே ஓடிச்சென்று வராகனுக்கு அரசன் கட்டளையை அறிவியா நிற்ப என்க.
 
(விளக்கம்) வாயிலோன் முன்னரே ஒருபிழை செய்திருந்தானாக; அதற்குப் பரிகாரம் கூறநினைத்துச் சிறிதுபொழுது நின்றான். தன் பரிகாரம் கூறுவதினும் காட்டில் அரசன் மிகவும் ஆர்வத்துடன் பணித்தமையாலே அரசன் பணியை விரைந்து செய்வதே இப்பொழுதைக்கு முதன்மையுடைய தென்று கருதி அப்பரிகாரத்தைக் கூறாமலே ஓடிச் சென்றான் என்பது கருத்து. அருங்கலம் - அரசர்க்கே சிறந்துரிமையுடைய முடி முதலிய அணிகலன்கள். மார்பற்கு உரைக்குஞ் செய்தியொன்றுடையோன் என்க.