உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           கோயிற் கோதிய கோல முடைத்தாய்
           வாயிலுந் தகைப்பும் வகையமைத் தியற்றிய
     45    முளைக்கோற் பெருந்திரை வளைத்த வட்டத்து
           நிலாவெண் மாடமொ டுள்ளறை சூழ்ந்த
           உலாவு மண்டபத் துலாவுத லின்றி
           அங்கண் ஞாலத் தழலுமிழ்ந் திமைக்கும்
           செங்கதிர்ச் செல்வனிற் சீர்பெறத் தோன்றிச்
     50    சீயஞ் சுமந்த செம்பொ னாசனத்
           தாய்மணி யணைசார்ந் தரத்த மீக்கோள்
           தாண்முத லசைத்தோர் தாமரைக் கையன்
           இருந்த மன்னவற் கெழுகோ லெல்லையுட்
           பொருந்தல் செல்லாது புக்கவ னிறைஞ்ச
 
           (வராகன் செயல்)
       43 - 54: கோயிற்கு..........இறைஞ்ச
 
(பொழிப்புரை) அதுகேட்ட வராகன், அரண்மனைக்கு நூல்களிற் கூறப்பட்ட அழகெலாம் உடையதாய் வாயில்களும் அறைகளும் முறையாக அமைத்தியற்றப்பட்ட முளையாகிய கோல்களையுடைய பெரிய திரையை வளைத்துக் கட்டிய வட்டமான இடத்தினூடே வெள்ளிய நிலாமாடமும் உள்ளறைகளும் சூழ்ந்தமைந்த உலாமண்டபத்தின் கண்ணே உலாவிநிற்றலொழிந்து மகளைப் பற்றிய செய்தி கேட்டற் பொருட்டு அகன்ற இடமமைந்த உலகத்தே தீக்கான்று சுடரா நின்ற சிவந்த கதிர்ச் செல்வத்தையுடைய ஞாயிற்றுக் கடவுள் போன்று சிறப்புறத் தோன்றி ஆங்குக்கிடந்த அரிமான் சுமந்த செம்பொன்னாலியன்ற இருக்கையின் மேலே அழகிய மணியணையிற் சாய்ந்து கொண்டு சிவந்ததொரு போர்வையாலே அடிகாறும் போர்த்துக்கொண்டு ஒரு தாமரை மலரைப் பிடித்த கையை யுடையவனாய் வீற்றிருந்த அப் பிரச்சோதன மன்னனுக்கு ஏழுகோல் எல்லைக்குட் செல்லாமல் அவ்வெல்லைக்குப் புறத்தே நின்று வணங்கா நிற்ப என்க.
 
(விளக்கம்) கோயில் - அரண்மனை. கோலம் - அழகு. தகைப்பு - அறை. வட்டம் - வட்டமான உள்ளிடம். சீயம் - அரிமான். அரத்த மீக்கோள் - சிவந்தபோர்வை. காற்றும் மழையும் உண்மையால் போர்த்தல் வேண்டிற்று. அரசரைக் காண்போர் ஏழுகோலெல்லைக்குமப்பானின்று காண்டல் மரபு ஐந்துகோல் எல்லை என்றும் கூறுப (மணி - 4 - 89.) அவன் - வராகன்.