உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
      55   வண்ணமும் வடிவு நோக்கி மற்றவன்
           கண்ணி வந்தது கடுமை சேர்ந்ததென்
           றெண்ணிய விறைவ னிருகோ லெல்லையுள்
           துன்னக் கூஉய் மின்னிழை பக்கம்
           மாற்ற முரையென மன்னவன் கேட்ப
     60    இருநில மடந்தை திருமொழி கேட்டவட்
           கெதிர்மொழி கொடுப்போன் போல விறைஞ்சப
 
             (இதுவுமது)
       55 - 61: வண்ணமும்..........இறைஞ்ச
 
(பொழிப்புரை) அங்ஙனம் வந்து வணங்கிய வராகனுடைய வண்ணத்தையும் வடிவத்தையும் மன்னவன் கூர்ந்து நோக்கி அவ்வராகன் தன்பாற் கூறவெண்ணிவந்த செய்தி கொடுமை யுடையதா யிருத்தல் வேண்டும் என்று அவன் மெய்ப்பாட்டினால் ஊகித்து உணர்ந்து கொண்டு அவ்வராகனை இருகோல் எல்லையில் தனக்கு அணுக்கனாய் வருமாறு அழைத்து "வராக! நீ வாசவதத்தை திறத்திலே கொணர்ந்த செய்தியாது? கூறுக", என்று வினவ, அதுகேட்ட வராகன் அரசனை நோக்கப் பெரிதும் அஞ்சியவனாய் மறுமொழி கூறாமல் நிலமகள் தன்னை வினவினாற் போலவும் அவள் வினவிய அழகிய வினாக்கட்கு விடை கூற முயல்வான் போலவும் நிலத்தையே நோக்கி மீண்டும் மீண்டும் வணங்கா நிற்ப என்க.
 
(விளக்கம்) வண்ணம் - நிறம். வடிவம் - உருவம், வண்ணமும் வடிவமும் நோக்கியது அவன் மெய்ப்பாடுகளாலே அவன் குறிப்பினை உணர்ந்து கோடற் பொருட்டு. என்னை நகை முதலிய மெய்ப்பாடுகளாலே மாந்தரின் வண்ணமும் வடிவமும் மாறுபடுதலுண்மையின் என்க. ஈண்டு வராகன்பால் "பொருத்தமில்லாப் புன்கணுடைமையும், சோர்ந்த யாக்கையும் சோர்ந்த முடியும் கூர்ந்த வியர்வும் குறும்பல்லு யாவும், வற்றிய வாயும் வணங்கியவுறுப்பும்" (சிலப். அரங். மேற்) என வருத்த முற்றோன் மெய்ப்பாடு காணப்படுதலின் இவன் கொணர்ந்த செய்தி "கடுமை சேர்ந்தது" என மன்னன் ஊகித்தான் என்பது கருத்து என்க. மின்னிழை - வாசவதத்தை. மன்னவன் வினாவிற்கு விடைதர அஞ்சி வராகன் மீண்டும் மீண்டும் நிலத்தையே நோக்கி வணங்கினான் என்பது கருத்து.