உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           பின்னுந் தானே மன்னவன் வினவ
           மறுமொழி கொடாஅ மம்மர் கண்டவன்
           உறுமொழி கேட்கு முள்ள மூர்தர
     65    நெஞ்சி னஞ்சாது நிகழ்ந்தது கூறென்
           றாருயிர்க் கபயங் கோமான் கொடுப்ப
 
             (இதுவுமது)
       62 - 66: பின்னுந்தானே.........கொடுப்ப
 
(பொழிப்புரை) மீண்டும் மன்னவன் வினவவும் மறுமொழி கொடாமைக்குக் காரணமான அவனது மனமயக்கத்தைக் கண்டு அரசன் அவன் கொணர்ந்துள்ள மிக்க மொழியைக் கேட்டற்குத் தன் நெஞ்சம் பெரிதும் அவாவி மீக்கூர்தலானே மீண்டும் "வராக ! நீ நின்னெஞ்சத்தே அஞ்சாமல் நிகழ்ந்ததனைச் சொல்லுக !" என்று தேற்றி அவ்வராகனது ஆருயிர்க்கு அபயம் அளித்தருளா நிற்றலாலே என்க.
 
(விளக்கம்) மம்மர் - மயக்கம். உறுமொழி - மிக்கமொழி. கோமான் - பிரச்சோதனன். அபயம் - அஞ்சற்க என்று ஒருவரைத் தேற்றிக்கூறும் அருண்மொழி.