உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           எரியுறு மெழுகி னுருகிய முகத்தன்
            ஆர மார்பநின் னருள்வகை யாங்கொல்
           கார்முகத் தெழுந்தது கடுவளி வளியென
     70     நகைத்தொழி லறியா நன்னகர் வரைப்பகம்
           புகைக்கொடி சுமந்து பொங்கெரி தோன்றப்
           புறமதிற் சேரியுங் குறுகுதற் கரிதாக்
           காற்று மெரியுங் கலந்துடன் றோன்ற
           எப்பான் மருங்கினு மப்பான் மலைக்குநர்த்
     75     தப்புத லல்லது மிக்குயல் காணேம்
 
             (இதுவுமது)
       67 - 75: எரியுறு.........காணேம்
 
(பொழிப்புரை) தீயிலிட்டமெழுகென உருகாநின்ற நெஞ்சையுடைய அவ்வராகன் "முத்தாரமணிந்த பெருமானே! நின் திருவருளின் வகையாற்போலும் முகில் எழு முன்னரே கடிய சூறைக் காற்றெழுந்தது; அக்கடுங்காற்றெழுந்தாற்போலவே விளையாட்டு வகையானும் தீத்தொழில் தோன்றியறியாத நமது நல்ல உஞ்சை நகரத்தின்கண் புகையாகிய கொடிகளைச் சுமந்து மிகுந்த தீத் தோன்றாநிற்றலாலே மதிற்புறத்துச் சேரிதானும் யாங்கள அணுகுதற்கு அரியதாகும்படி காற்றும் நெருப்பும் கலந்து தோன்றாநிற்பவும்,எல்லாத் திசைகளிடத்தும் அங்கங்கே போர் செய்து மாந்தரைக் கொல்லும பகை மறவர்க்கு அகப்படாமல் யாங்கள் உயிர்தப்பு தலன்றி இவ்விடையூ றுகளினின்றும் மிக்குச் சென்று உய்யும் நெறிகண்டிலேம்"
 
(விளக்கம்) வளி என எரிதோன்ற என்க. மலைக்குநர் - பகைவர். மிக்கு - இடையூற்றைக் கடந்து மேற்சென்று என்றவாறு.