உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           கூற்று மஞ்சுநின் னாற்ற லாணை
           உரைப்பவு மொழியாது தலைத்தலை சிறப்பநின்
           அடிநிழல் வட்ட மடையத் தரூஉம்
           கடியர ணின்மையிற் கையற வெய்தி
     80    வெம்முரண் வேழத்து வெஞ்சின மடக்கிய
           உண்முர ணறாஅ வுதயண குமரனொ
           டுடன்பிடி யேற்ற லுற்றனெ மாகித்
           தடம்பெருங் கண்ணியைத் தலைவயிற் பணிந்திரந்
           தேற்றின மேற்றலுங் காற்றெனக் கடாஅய்
 
             (இதுவுமது)
         76 - 84: கூற்றும்..........ஏற்றினம்
 
(பொழிப்புரை) கூற்றுவனும் அஞ்சும் பெருமானுடைய ஆற்றன் மிக்க ஆணையை யாங்கள் எடுத்தெடுத் தோதியும் இவ்விடையூறுகள் ஒழிவின்றி இடந்தோறும் இடந்தோறும் மிகாநிற்றலாலே பெருமானுடைய திருவடி மருங்கே வாசவதத்தை எய்தும்படி காவல்செய்து கொணர்ந்து தருதற் கேற்ற வலிய பாதுகாப்பு எம்பாலில்லாமையானே வேறொன்றும் செய்வதறியாமல் வெவ்விய மாறுபாடுடைய நளகிரியினது வெவ்விய சினத்தை அடக்கி நகரினை உய்யக்கொண்டவனும் உட்பகை யறாதவனுமாகிய உதயண குமரனோடு அவன் பிடியானையில் ஏற்றுதலைத் துணிந்தேமாகி மிகப் பெரிய கண்களையுடைய வாசவதத்தையை அவன்பால் அழைத்துப்போய் மிகவும் அவனைப் பணிந்து வேண்டி அப்பிடியின் மேலேற்றினேமாக என்க.
 
(விளக்கம்) ஆணைகூறி இடையூறகற்றவும் அகலாது சிறப்ப என்றவாறு. திருவடி நீழலாகிய வட்டம் - என்றது அடியின் மருங்கே என்றவாறு. உண்முரண் - உட்பகை. கண்ணி - வாசவதத்தை. தலையிற் கைகூப்பிப் பணிந்து எனினுமாம்.