உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           முகைநகை முத்தொடு தகைமுடி தயங்க
           அருவரை யகலத் தாரம் புரளத்
           திருமுடி யண்ண றீப்படச் சீறி
           எழுவுறழ் திணிதோ ளெடுத்தன னோச்சிப்
     110    பொழிமணித் திண்டூண் பொறிபடப் புடைத்து
           மாற்றுச் சிங்கத்து மறக்குரல் கேட்ட
           ஏற்றுச் சிங்கத்தி னிடித்தெழுந் துரறிக்
 
             (இதுவுமது)
         106 - 112: முகை..........உரறி
 
(பொழிப்புரை) அரும்பனைய ஒளி முத்துமாலையோடு அழகுமிக்க தனது முடிக்கலன் சுடரும்படியும், கடத்தற்கு அரிய மலை போன்ற மார்பின்கண்ணதாகிய முத்தாரம் புரளும்படியும்; அழகிய முடி வேந்தனாகிய அப்பிரச்சோதனன் கண்களிலே தீயுண்டாகச் சீறி இரும்புத் தூண்போன்ற தனது திணிந்த கையை ஓங்கி வீசி ஒளி சொரியா நின்ற மணிகள் பதித்ததொரு திண்ணிய தூணைத் தீப்பொறி பறக்கும்படி புடைத்துப் பகைச் சிங்கத்தினது மற முழக்கங்கேட்டதோர் ஆண் சிங்கத்தைப் போன்று இடிபட முழங்கி எழுந்து நின்று ஆரவாரித்து என்க.
 
(விளக்கம்) முகை - புன்னை முதலியவற்றின் அரும்பு. நகை - ஒளி. நகை - அழகு. எழு - இருப்புத் தூண்; கணையமரமுமாம். பொழிந்த மணியுமாம். பொறி - தீப்பொறி. ஏற்றுச் சிங்கம் - ஆணசிங்கம்